வங்கக்கடலில் புதிய புயல்… சென்னை வானிலை தகவல்!
- IndiaGlitz, [Tuesday,November 30 2021]
தெற்கு அந்தமான் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. இது அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தாய்லாந்து மற்றும் அதையொட்டி இருக்கக்கூடிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பொழியும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் தற்போது சுறாவளி காற்றாக மாறும் எனவும் பின்னர் வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு ஒரிசா இடையே நகரும் எனவும் கூறப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பொழியும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.