ரூ.400 கோடி செலவில் திரைப்படமாகும் 'தாய்லாந்து குகை மீட்பு சம்பவம்
- IndiaGlitz, [Thursday,July 12 2018]
எந்த ஒரு பரபரப்பான அல்லது முக்கிய நிகழ்வுகள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அதை சினிமாக்காரர்கள் விட்டுவைப்பதில்லை. நிஜ சம்பவத்தை விட விறுவிறுப்பாக திரைப்படம் எடுத்து மக்கள் மனதில் இடம்பெறுவது வழக்கம்.
இந்த நிலையில் சமீபத்தில் தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீட்ப்புக்குழுவினர் தங்கள் உயிரை பணயம் வைத்து உயிர்சேதமின்றி அனைவரையும் காப்பாற்றிய மீட்பு நடவடிக்கை உலகம் முழுவதும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. உலகவரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியவர்களை உயிர்ச்சேதம் இன்றி காப்பாற்றப்பட்டது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த மீட்பு நடவடிக்கையில் மீட்புக்குழுவில் இருந்த ஒரு வீரர் மரணம் அடைந்தார்
இந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது திரைப்படமாகவுள்ளது. 'காட்ஸ் நாட் டெட்' என்ற பெயரில் இந்த சம்பவம் திரைப்படமாகவுள்ளதாகவும், இந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.400 கோடி என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தத்ரூபமாக தயாரிக்கவுள்ளது.
இந்த படத்தில் மீட்புக்குழுவினர், சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வேடங்களுக்கு நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.