சிம்பு வீடியோவை காட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த தொழிலதிபர்
- IndiaGlitz, [Wednesday,February 27 2019]
நடிகர் சிம்புவுடன் தான் நெருக்கமாக உள்ள வீடியோவை விளம்பரப்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது
தஞ்சையை சேர்ந்த பிரபு என்பவர் ருஷ்கின் என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கல்வியாளர் போல தன்னை விளம்பரப்படுத்தி கொண்டார். சமீபத்தில் சிம்பு லண்டன் சென்றபோது அவருடன் நெருக்கமான இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்த பிரபு, தன்னுடைய கல்வி நிறுவனத்தின் லோகோவை சிம்பு அறிமுகம் செய்ததாக போலியாக விளம்பரப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி சிம்புவுடன் ஒன்றாக அமர்ந்து ரஜினியின் 'லிங்கா' படத்தை பார்த்ததாக பிரபு, தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். மேலும் அனிருத்துடன் நெருக்கமாக் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் ஆர்மீனியா நாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், 6 மணி நேரம் வேலை செய்தால் ரூ.40 ஆயிரம் சம்பளம் மற்றும் தங்குமிடம் உணவு இலவசம் என்றும் விளம்பரம் செய்து தமிழ்நாட்டில் உள்ள பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக அவர் மீது புகார்கள் குவிந்துள்ளது. இவரை நம்பி ஏமாந்து ஆர்மீனியா சென்ற பல இளைஞர்கள் இந்தியாவை விட பொருளாதாரத்தில் பெருமளவு பின் தங்கிய நாடாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சுற்றுலா விசாவில் அவர்கள் சென்றுள்ளதால் வேலையும் கிடைக்காமல் நாடு திரும்பவும் முடியாமல் பல இளைஞர்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிம்புவின் வீடியோ மற்றும் படத்தை காட்டி ஏமாற்றிய பிரபு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.