ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை பைக்கில் அழைத்துச் சென்றவருக்கு அபராதம் ரூ.6300..!
- IndiaGlitz, [Monday,December 30 2019]
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த சம்பவத்தின்போது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சி நிர்வாகி ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். அப்போது இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்த நிலையில், தற்போது ரூ. 6,300 அபராதத்தை போக்குவரத்து போலீசார் விதித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடிய ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரை நேற்று முன்தினம் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவிக்க முயன்றார்.
அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காரை விட்டு இறங்கிய பிரியங்கா, நடக்கத் தொடங்கினார். அப்போதும் போலீசார் தடுக்க முயன்றனர். இதனை மீறிச் சென்று கட்சிக்காரர் தீரஜ் குஜ்ஜார் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஏறி பிரியங்கா சென்றார். அப்போது இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இந்த நிலையில், பைக்கின் உரிமையாளருக்கு போக்குவரத்து போலீசார் ரூ. 6,300 அபராதம் விதித்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி ஒரு புற்று நோயாளி ஆவார். அவர் லக்னோவில் கைது செய்யப்பட்டிருந்தார். அவருடன் சேர்த்து சுமார் 1,113 பேர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கைதாகி இருந்தனர். அவர்களில் 498 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 148 பேர் மீரட்டை சேர்ந்தவர்கள். பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் தங்களது சொத்தை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.