4வது மனைவியால் கொல்லப்பட்ட கார் திருடன்: கொலைக்கு உதவிய 3வது காதலன்

  • IndiaGlitz, [Sunday,November 10 2019]

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் அவரது நான்காவது மனைவியால் கொலை செய்யப்பட்டதும் அந்தக் கொலையை செய்த பெண்ணுக்கு அவருடைய மூன்றாவது காதலன் உதவி செய்ததுமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த ராஜபாண்டி என்ற கார் திருடனுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் அவரது கார் திருடும் தொழிலுக்கு துப்பு கொடுக்கும் பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனையடுத்து மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து வந்த ராஜபாண்டியின் பார்வை மூன்றாவது மனைவியின் மருமகள் சித்ரா மீது பார்வை விழுந்தது.

மூன்றாவது மனைவியும் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது மருமகள் சித்ராவை ராஜபாண்டியுடன் குடித்தனம் நடத்த தனியாக அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து ராஜபாண்டி-சித்ரா இருவரும் தனி வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராஜபாண்டியனின் கார் திருடன் தொழிலுக்கு உதவி செய்யும் ராமர் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரில் ராமருடன் சித்ராவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை திருமணமான சித்ரா, ராமருடன் வாழ முடிவு செய்தார். இந்த நிலையில் சித்ரா-ராமர் காதலை அறிந்த ராஜபாண்டி ஆத்திரமடைந்து இருவரையும் எச்சரித்துள்ளார். எனவே ராஜபாண்டி உயிருடன் இருந்தால் தங்கள் காதல் நிறைவேறாது என்று முடிவு செய்த சித்ராவும் ராமரும், சக்திவேல் உதவியுடன் ராஜபாண்டியை கொலை செய்து தலை மற்றும் உடலை தனித்தனியாக வெட்டி இரண்டு வெவ்வேறு இடங்களில் வீசிவிட்டு தலைமறைவாகினர்.

ராஜபாண்டியை காணவில்லை என அவருடைய முதல் இரண்டு மனைவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் அவருடைய தலை மற்றும் உடலை கைப்பற்றி அதன் பின்னர் சித்ரா-ராமர் ஜோடியையும் கண்டுபிடித்து கைது செய்தனர். ஒரு ஆண் பல பெண்களுடனும், ஒரு பெண் பல ஆண்களுடனும் வாழும் முறையற்ற உறவு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.