10 லிட்டர் பிராந்தி, ரூ.10 லட்சம் பணம்: ஒரு வேட்பாளரின் வாக்குறுதி
- IndiaGlitz, [Wednesday,March 20 2019]
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பது என்பது காலங்காலமாக நடந்து வரும் நடைமுறை. வெற்றி பெற்ற பின் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, ஐந்து வருடம் கழித்து மீண்டும் அதே வாக்குறுதியை தரும் வேட்பாளர்கள் இந்தியாவில் அதிகம்.
இந்த நிலையில் திருப்பூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் சேக் தாவூத் என்பவர் வித்தியாசமாக பல்வேறு வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு கொடுத்து வருகிறார். தனது தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு மாதம் 10 லிட்டர் சுத்தமானதாக பாண்டிச்சேரி பிராந்தி பெற்றுத்தருவேன் என்றும், அனைத்து மத பெண்களுக்கும் திருமணத்திற்கு 10 பவுன் நகை, 10 லட்சம் பணம் பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் போராட்டம் செய்து வரும் நிலையில் இவர் மட்டும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கூடாது என டெல்லி வரை சென்று தொடர்ந்து போராடவுள்ளதாக கூறியுள்ளார். இந்த ஒரு காரணத்திற்காகவே இவருக்கு குடிமகன்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.