சென்னையின் முக்கிய சாலையில் உருண்டோடிய மனிதத்தலை: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

சமீபத்தில் பிரபல ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாடியபோது போலீசார் சுற்றி வளைத்து 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர். இதனால் சென்னையில் குற்றங்கள் குறையும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று சென்னையின் பிசியான சாலைகளில் ஒன்றான ஜிஎஸ்டி சாலையில் திடீரென மனிதத்தலை ஒன்று உருண்டோடிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள காட்டாங்குளத்தூர் என்ற பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் பிசியாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென நடுரோட்டில் மனிதத்தலை ஒன்று உருண்டோடியது. இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் கையில் இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்து இந்த மனிதத்தலை சாலையில் விழுந்ததாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து மனிதத்தலையை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கஞ்சா வியாபாரி பாலாஜி என்பவரின் தலைதான் இது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தலைக்கான உடலை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.