விஜய் ரசிகர்களுக்கு அட்வான்ஸ் இன்ப அதிர்ச்சி: அதிகாரபூர்வ தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
இளையதளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக 'விஜய் 61' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் திரைப்படத்தின் டைட்டிலையும் தேனாண்டால் ஸ்டுடியோஸ் லிமிடேட் நிறுவனம் அவரது பிறந்த நாளான ஜூன் 22க்கு முந்தைய நாளான ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் மிக பிரமாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இராம்நாராயணன் ஆசியுடன் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் 100வது படம் இது.
'விஜய் 61' மிகப்பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகி வருகிறது. இந்தியாவின் பல பகுதிகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் மற்றும் நூற்றுக்கணகான தொழில்நுட்ப கலைஞர்கள் இரவுபகலாக இந்த பிரமாண்டமான திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
இந்திய திரை உலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் இந்த திரைப்படத்திற்காக அணி சேர்ந்து இருக்கின்றார்கள்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், வெற்றி இயக்குனர் அட்லி, இளையதளபதி விஜய் இவர்களுடன் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் நிறுவனம் இணையும் முதல் திரைப்படம் இது.
ஒளிப்பதிவு விஷ்ணு, படத்தொகுப்பு ரூபன், கலை இயக்குனர் முத்துராஜ், சண்டைப்பயிற்சி அனல் அரசு, திரைக்கதை விஜயேந்திர பிரசாத், ரமணகிரிவாசன் ஆகியோர் கவனிக்கின்றனர். திரைப்படத்தின் பாடல்களை விவேக் எழுதுகிறார்.
இளையதளபதி விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேல், கோவை சரளா, சத்யன், யோகிபாபு, இவர்களுடன் சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் அணிவகுத்து இருக்கிறது.
அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளிவர பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் நிறுவனம் சார்ப்பில் முரளிராமசாமி, ஹேமாருக்மணி தயாரிக்கிறார்கள். இப்படத்தை அட்லி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments