இந்த மனசுதான் சார் கடவுள்.. ஸ்விக்கி டெலிவரி பாய்க்கு உதவி செய்த இளம்பெண்..

  • IndiaGlitz, [Thursday,June 15 2023]

ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த இளம் பெண்ணுக்கு டெலிவரி கொடுக்க சென்ற டெலிவரி பாய்க்கு அந்த பெண் செய்த உதவி சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது

ஷாஹில் சிங் என்பவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு முன்னணி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் அவர் வேலையிழந்தார்.

அதன்பின்னர் வேறு வழியின்றி ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவர் பாயாக மாறினார். ஆனால் அவரிடம் வாகனம் எதுவும் இல்லை என்பதால் கிடைக்கும் ஆர்டரை நடந்தே சென்று அவர் டெலிவரி செய்து வந்தார்.

இந்த நிலையில் பிரியன்ஷி என்ற இளம் பெண் ஐஸ் கிரீம் ஆர்டர் செய்திருந்த நிலையில் அவரது ஆர்டரை கொண்டு போய் ஷாஹில்சிங் கொடுத்தார். அப்போது அவர் மூச்சிரைத்து மிகவும் சோர்வுடன் இருந்ததை பார்த்தவுடன் பிரியன்ஷி என்ன நடந்தது? என்று கேட்டார்.

அதற்கு ஷாஹில், ’என்னிடம் இருசக்கர வாகனம் இல்லை, போக்குவரத்து வசதியும் இல்லை, உங்கள் ஆர்டரை நான் 3 கிலோமீட்டர் நடந்தே வந்து டெலிவரி செய்கிறேன்’ என்று கூறினார்

மேலும் கோவிட் நேரத்தில் தனக்கு வேலை இழப்பு ஏற்பட்டதாகவும், தான் ஒரு பொறியியல் பட்டதாரி என்றும், வேலையில்லாமல் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் ஸ்விக்கி மூலம் ஒரு ஆர்டருக்கு தனக்கு 20 முதல் 25 ரூபாய் கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் தனது பெற்றோருக்கு வயதாகிவிட்டதால் அவர்களிடம் பணம் கேட்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

உடனே அந்த இளம் பெண் பிரியன்ஷி ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் 500 ரூபாய் பணம் கொடுத்ததோடு அவருடைய புகைப்படம், கல்வி சான்றிதழ் ஆகிய விவரங்களையும் வாங்கி வைத்துக்கொண்டார்

இதனை அடுத்து அவர் தன் லிங்க்ட்-இன் பக்கத்தில் அந்த இளைஞருக்கு தகுந்த வேலை கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பலர் அவருக்கு வேலை கொடுக்க முன்வந்தனர். தற்போது ஷாஹில்சிங் ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். இதனை அடுத்து பிரியன்ஷி செய்த உதவியை பாராட்டிய நெட்டிசன்கள் ’இந்த மனசு தான் சார் கடவுள்’ என்று தெரிவித்து வருகின்றனர்