தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தை சமயோசிதமாக காப்பாற்றிய ஓட்டல் உரிமையாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது ஓட்டலில் சாப்பிட வந்த ஒரு குடும்பம் தற்கொலைக்கு முயன்றதை சமயோசிதமாக காப்பாற்றிய ஓட்டல் உரிமையாளரின் சுவாரஸ்யமான சம்பவம் தான் இந்த கதை
தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் மதுரா விலாஸ் என்ற ஓட்டல் ஒன்றை மகேஷ் என்பவர் நடத்தி வந்தார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக அந்த் ஓட்டல் இருந்ததால் அந்த வழியாக பயணம் செய்பவர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள்.. இந்த நிலையில் ஒரு மழை இரவில் ஒரு குடும்பத்தினர் காரில் அந்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்தனர். கணவன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சாப்பிட உட்கார்ந்த அவர்கள் தேவையானதை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். குழந்தைகள் இருவரும் உணவை ருசித்து சாப்பிட்டாலும் கணவன், மனைவி ஆகிய இருவரும் பெரும் சோகத்தில் இருப்பதை அந்த ஓட்டலின் உரிமையாளர் கல்லாவில் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இடையில் இருவரும் லேசாக கண்ணீர் விட்டதையும் அவர் கவனிக்க தவறவில்லை. இருப்பினும் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று அவர்களை கவனிக்காதது போல் கவனித்துக்கொண்டிருந்தார்
இந்த நிலையில் அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் சர்வரை அழைத்த மகேஷ், அவர்கள் நால்வருக்கும் ஆளுக்கு ஒரு டம்ளர் மோர் கொடுக்கச் சொன்னார். மோர் வந்தவுடன் அவரே அந்த குடும்பத்தினருக்கு பரிமாறினார். அதை அவர்கள் வேண்டா வெறுப்புடன் பார்த்தனர். இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் வெளியே விளையாட சென்றபோது அந்த நபர், தன் பாக்கெட்டில் இருந்து விஷ பாட்டிலை எடுத்து நான்கு மோர் டம்ளர்களிலும் கலந்தார். இதை கவனித்த மகேஷ் அதிர்ச்சி அடைந்து, அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்றும் அந்த பிரச்சனைக்காக அவர்கள் தற்கொலை செய்ய முயல்கிறார்கள் என்பதையும் புரிந்து கொண்டார். இந்த நிலையில் குழந்தைகள் திரும்பி வந்தவுடன் மோரை அவர்களுக்கு கொடுக்க முயன்றபோது திடீரென வந்த மகேஷ், அந்த் 4 டம்ளர் மோரையும் எடுத்துக் கொண்டு இதில் உப்பு போட மறந்து விட்டதால் நான் வேறு கொண்டு வருகிறேன் என்று கூறி எடுத்துச் சென்றுவிட்டார்
அதன் பின்னர் சில நிமிடங்கள் கழித்து குழந்தைகளை மீண்டும் விளையாட அனுப்பி வைத்த மகேஷ், அவர்கள் இருவரிடமும் பேச்சுக் கொடுத்தார். அவரிடம் பேசுவதை அந்த கணவன் மனைவி இருவரும் விரும்பவில்லை என்று தோன்றியது. ஆனால் மகேஷ் தனது சொந்த கதையை சொல்வது போல் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார். தன்னுடைய நண்பனால் தான் ஏமாற்றப்பட்டு அனைத்து சொத்தையும் இழந்துவிட்டதாகவும், உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்களால் தான் கடன்காரர் என்று வெறுக்கப்படுவதாகவும், தன்னுடைய மனைவியும் இறந்துவிட்டார் என்றும், தன்னுடைய ஒரே மகன் தன்னை கவனிக்காமல் துபாயில் பிசினஸ் செய்வதாகவும் தன்னை கவனிக்க யாருமே இல்லை என்றும் அந்த தம்பதியிடம் மகேஷ் கண்கலங்கி கூறினார்.
மேலும் நாளை தனது மகன் துபாயில் இருந்து வந்த பின் பொறுப்புகளை எல்லாம் அவரிடம் ஒப்படைத்து விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருப்பதாகவும் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவன் மனைவி இருவரும் அவருக்கு ஆறுதல் கூற தொடங்கினார். வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் வருவது சகஜம்தான் என்றாலும் அதற்காக தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது என்றும் தங்களுக்கும் கூட பிசினஸில் நஷ்டம் என்றும் ஏகப்பட்ட பிரச்சனை என்றும் அதை சமாளித்து வாழ்ந்து வருகிறோம் என்றும் அதனால் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆறுதல் கூறினார்
அதற்கு மகேஷ் உங்களைப்போல் அன்பான மனைவி, அழகான குழந்தைகள் மற்றும் இளமை தனக்கு இல்லை என்றும், உங்களால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்ய மனோதைரியமும் வயதும் உள்ளது என்றும், ஆனால் தனக்கு அது இல்லை என்றும் கூறி கண்கலங்கினார். அதன் பின்னர் கணவன் மனைவி இருவரும் மாறி மாறி அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை சமாதானப்படுத்தினர். மேலும் தன்னுடைய போன் நம்பரை கொடுத்து இரண்டு நாளுக்கு ஒருமுறை பேசுவதாகவும், தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் அவர்கள் வாக்குறுதி கொடுத்துவிட்டு கிளம்பினார். அவர்கள் வெளியே செல்லும்போது அந்த கணவன் தனது பாக்கெட்டில் இருந்த விஷ பாட்டிலை எடுத்து தூக்கி எறிந்தார். அதை பார்த்த மகேஷ் மன நிம்மதி அடைந்து, தான் சிறுவயது நாடகம் நடித்தது இப்போது ஒர்க் ஒர்க் அவுட் ஆகி விட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். ஒரு குடும்பத்தை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்ற தனது சின்ன வயது நாடக நடிப்பு உதவியாக இருந்ததை எண்ணி மகேஷ் தனக்குள்ளே பெருமைப்பட்டுக் கொண்டார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments