கொரோனாவை விட கொடிய உயிர்க்கொல்லி? அச்சம் தெரிவிக்கும் CDC!
- IndiaGlitz, [Tuesday,February 02 2021]
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் கொரோனா நோய்த்தொற்று குறித்த அச்சத்தில் இருந்து மக்கள் சற்று விடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கொரோனாவை விட கொடிய உயிர்க்கொல்லி பரவ இருக்கிறது என்றும் இதுகுறித்து உலக நாடுகள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்றும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் CDC வெளியிட்டு உள்ள அந்த செய்திக் குறிப்பில் ஒரு பூஞ்சை வரும் காலத்தில் பெரும் உயிர்க் கொல்லியாக மாறாலாம் எனத் தெரிவித்து உள்ளது. அதாவது கேண்டிடா அவுரிஸ் எனும் பூஞ்சை நோய்த்தொற்று கறுப்பு பிளேக் நோய் போன்றே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்தொற்று நோய் உடனடியாக மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் இத்தொற்று நோய் மற்ற நோய்களை விட தீவிரமாகப் பரவும் தன்மைக் கொண்டது என்றும் CDC குறிப்பிட்டு இருக்கிறது.
பூஞ்சை வகையைச் சேர்ந்த இந்த உயிர்க்கொல்லி மருத்துவ உபகரணங்கள் வாயிலாகவே மிக எளிதாக பரவிடும் என்றும் பொது வெளியில் அதிக நேரம் உயிர் வாழும் தன்மைக் கொண்டது கொண்டது என்றும் அதன் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இதனால் இந்நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதும் பெரும் சவாலாக மாறலாம் என்றும் CDC எச்சரிக்கை செய்து இருக்கிறது.
இதற்கு முன்பு அமெரிக்காவில் கடந்த 2009 இல் பாதிப்பை ஏற்படுத்திய இந்நோய்த் தொற்றை லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் ஜொஹானா ரோடஸ் மிகத் திறமையாகக் கையாண்டு கட்டுப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதையடுத்து கடந்த 2016 லும் இத்தொற்று நோய் பிரிட்டனில் பாதிப்பை ஏற்படுத்தச் செய்தது. தற்போது மீண்டும் இத்தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் CDC அச்சம் தெரிவித்து இருக்கிறது.