திருமணம் முடிந்தவுடன் கொரோனா வார்டுக்கு சென்ற புதுமண தம்பதிகள்: ஆச்சரியத்தில் உறவினர்கள்
- IndiaGlitz, [Wednesday,June 24 2020]
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஆடம்பரமாக நடக்க வேண்டிய பல திருமணங்கள் மிக எளிமையாக நடத்தப்பட்டு அதில் மிச்சமாகும் பணத்தை ஏழை எளியவர்களுக்கு புதுமணத்தம்பதிகள் உதவி செய்து வருகின்றனர் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மும்பையில் புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி திருமணம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு சென்றதால் உறவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் நேற்று எரிக் மட்டும் மெர்லின் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக இருவீட்டார் தரப்பில் மிகக் குறைந்த நபர்களே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருமணம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் புதுமண தம்பதிகள் இருவரும் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு உள்ள நிர்வாகிகளை சந்தித்து தங்களுடைய திருமண பரிசாக அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்துதல் மையத்திற்கு 50 படுக்கைகளை நன்கொடையாக கொடுக்க விரும்புவதாக கூறினார்கள்.
இதனை அடுத்து ஆச்சரியமடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறியதோடு அவர்கள் கொடுத்த ஐம்பது படுக்கைகளையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். மும்பையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையில் உள்ளது. இதனை அடுத்து புதுமண தம்பதிகள் கொடுத்த ஐம்பது கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணைகளை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகிகள் நன்றி கூறினார்கள்.