கொரனோ காலத்திலும் கடவுள் பெயரில் பணம் கையாடல்: அதிர்ச்சி தகவல்

கொரோனா காலத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கடவுள் பெயரிலும் ஒரு ஊழல் நடந்துள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஒன்று சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில். சென்னை மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவது உண்டு.

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் காரணமாக ஊராக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் இந்த கோயில் பூட்டப்பட்டுள்ளது. இருப்பினும் கோவில்களில் அர்ச்சகர்கள் பூஜைகள் நடத்த மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயில்களில் பூஜைக்குரிய பொருட்களை வாங்க டெண்டர் விடப்பட்டு உள்ளதாகவும் அதன் மூலம் பூஜைகள் செய்வதற்கான பொருட்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்கு நேரத்தில் பூஜை பொருட்களை டெண்டர் எடுத்தவர் பூ, மாலை உள்பட எந்த பூஜை பொருட்களையும் கோயில் நிர்வாகத்திற்கு அளிக்கவில்லை. ஆனால் ஏலம் எடுத்தவர் பூ, மாலை அளித்ததாக கூறி ஒவ்வொரு மாதமும் 36 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு மாதங்களுக்கு ரூபாய் 1.44 லட்சம் ஏலம் எடுத்தவர்களுக்கு வழங்கியதாக கூறி கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தொகை ஏலம் எடுத்தவருக்கும் தரப்படவில்லை என்றும் அந்த தொகையை ஏலம் எடுத்தவருக்கு தரப்பட்டது போன்று உயர் அதிகாரி ஒருவர் எடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் கடவுளுக்கு பூஜை பொருட்கள் வாங்கியதாக செய்யப்பட்ட ஊழல் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.