ஃபானி புயலால் குடியிருப்பு பகுதிகளில் விழுந்த பிரமாண்டமான கட்டுமான ஏற்றம்: அதிர்ச்சி வீடியோ

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் இன்று காலை 8 மணி அளவில் ஒடிஷா மாநிலத்தை கடந்து சென்றதால் அம்மாநிலத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேதத்தை கணக்கிடவே பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஃபானி புயல் கரையை கடந்தபோது புவனேஷ்வர் நகரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பிரமாண்டமான உயரத்தில் இருந்த கட்டுமான ஏற்றம் ஒன்று காற்றின் சீற்றத்தால் நிலைகுலைந்து குடியிருப்பு பகுதியில் விழுந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஏற்றம் விழுந்ததால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

மேலும் ஃபானி புயலால் ஒடிஷாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கூரை காற்றில் பறந்ததாகவும், இதனையடுத்து அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மருத்துவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் புவனேஷ்வர் ரயில் நிலையத்தின் மேற்கூரைகளும் பயங்கர சேதம் அடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புவனேஷ்வர் வழியாக செல்லும் 200 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.