ஜெய்யால் ரூ.1.5 கோடி நஷ்டம்: பலூன் தயாரிப்பாளரின் பதற வைக்கும் புகார்
- IndiaGlitz, [Friday,January 05 2018]
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'AAA' படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் சிம்புவின் மீது சரமாரியாக புகார் கூறிய நிலையில் அதேபாணியில் தற்போது ஜெய் மீது 'பலூன்' பட தயாரிப்பாளர் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து பலூன் தயாரிப்பாளர் ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்
இந்த புகாரில் 'பலூன்' திரைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதிதான் வெளியானதாகவும், இந்த தாமதத்திற்கு நடிகர் ஜெய்யே முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜெய் தேதிகளை சரியாக கொடுக்காமலும், கொடுத்த தேதிகளில் சரியாக படப்பிடிப்புக்கு வராமலும், அப்படியே வந்தாலும் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததாலும் படப்பிடிப்பு தாமதமானதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படப்பிடிப்புக்கு பெரும்பாலும் குடித்துவிட்டு போதையில்தான் ஜெய் வருவார் என்றும் வந்தவுடன் எப்போது பேக்கப் என்றுதான் கேட்பார் என்றும் அவர் கொடுத்த டார்ச்சரால், இயக்குனர் சினிஷ் தற்கொலை முயற்சி செய்ததாகவும், இதற்கெல்லாம் தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் தயாரிப்பாளர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்
கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தபோது பல லட்சம் செலவு செய்து செட் போட்டு ஜெய்க்காக காத்திருந்ததாகவும், ஜெய் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், இதனால் செட் மழையில் நனைந்து பழுதானதாகவும், அதை சரிசெய்ய கூடுதலாக ரூ.10 லட்சம் செலவு செய்ததாகவும் அந்த புகாரில் மேலும் கூறப்பட்டுள்ளது
எனவே ஜெய்யால் தங்களுக்கு ரூ.1.5 கோடி நஷ்டம் என்றும், இந்த நஷ்டத்தை ஜெய் தங்களுக்கு செட்டில் செய்ய தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜெய் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னொரு அசோக்குமார்ராக தங்களை உருவாக்கிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட பின்னரே ஜெய் மற்ற படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கை அவரை வைத்து படம் தயாரித்து கொண்டிருக்கும் அனைத்து சக தயாரிப்பாளர்கள் நன்மை கருது வைக்கும் வேண்டுகோள் என்றும் 'பலூன்' தாயாரிப்பாளர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெய்யின் பெயரி குறிப்பிடாமல் இதேபோன்ற குற்றச்சாட்டை இயக்குனர் சினிஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.