கைலாச நாட்டில் ஓட்டல் வைக்க அனுமதி கேட்டவர் மீது புகார்: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Monday,August 24 2020]
நித்தியானந்தாவின் கைலாச நாட்டில் ஓட்டல் வைக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதிய மதுரை ஹோட்டல் அதிபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாகவும் அந்த நாட்டுக்கு எனத் தனிக் கொடி, தனி பாஸ்போர்ட் ஆகியவற்றை உருவாகியுள்ளதாகவும் அறிவித்திருந்தார். மேலும் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டின் கரன்சியையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் கைலாச நாட்டில் ஓட்டல் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ஓட்டல் நிறுவனர் குமார் என்பவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். நித்தியானந்தாவின் முகவரி தெரியாது என்பதால் இதை ஊடகங்கள் மூலம் அனுப்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஓட்டல் அதிபர் குமாரின் கடிதத்திற்கு சமீபத்தில் நித்தியானந்தாவும் பதிலளித்தார். கைலாச நாட்டில் ஓட்டல் நடத்த உங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் விரைவில் எங்கள் நாட்டின் அதிகாரிகள் உங்களை தொடர்புகொண்டு பேசுவார்கள் என்றும் நித்தியானந்தா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளிக்கு கடிதம் எழுதிய ஓட்டல் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.