சிவகார்த்திகேயன் தந்தை குறித்து சர்ச்சை கருத்து: எச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜக பிரபலம் எச் ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக பிரமுகர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது சிவகார்த்திகேயன் தந்தையைக் கொன்றது தற்போதைய பாபநாசம் தொகுதி எம்எல்ஏ என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஜவாஹிருல்லா கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அப்ரார் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் எச் ராஜாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்றும் ஆனால் அவரது தந்தையை ஜெயப்பிரகாஷ் என குறிப்பிட்டு அவரை கொலை செய்ததாகவும் உண்மைக்குப் புறம்பான தகவலை எச்.ராஜா தெரிவித்துள்ளார் என்றும் எனவே அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.