லடாக்கில் சீன ராணுவம் திடீர் தாக்குதல்: 3 இந்திய ராணுவத்தினர் வீரமரணம்

கடந்த சில வாரங்களாகவே இந்திய-சீன எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும், பதிலடியாக இந்திய ராணுவமும் எல்லையில் தனது ராணுவத்தை குவித்ததும் மீண்டும் ஒரு இந்திய-சீனப்போர் வருமோ என்ற அளவில் பதட்டம் அதிகரித்தது

கொரோனா வைரஸ்க்கு சீனா தான் காரணம் என உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டை திசை திருப்பவே சீனா, இந்திய எல்லையில் படைகளை குவித்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இந்தியாவுக்கு அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒரே நேரத்தில் ஆதரவு கொடுத்ததால் சீன ராணுவம் சமீபத்தில் பின்வாங்கியதாகவும் செய்திகள் வெளியனாது

இந்த நிலையில் நேற்று இரவு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புகள் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் மூவர் உயிரிழந்ததாகவும், சீன தரப்பில் உயிரிழப்பு குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்திய தரப்பில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க இரு நாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்திய எல்லையில் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை செய்து வருவதாகவும், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது