6 மாசமா வீட்டுக்கே போகல… 700 கொரோனா உடல்களை அப்புறப்படுத்திய துப்புரவு தொழிலாளி…
- IndiaGlitz, [Saturday,October 10 2020]
கொரேனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு சொந்த உறவினர்களே பயப்படும்போது ஒரு துப்புரவு தொழிலாளி இதுவரை 700 கொரோனா உடல்களை தையரியமாக அப்புறப்படுத்தி இருக்கிறார். அவருக்கு இணையதளப் பக்கத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி வருவபவர் முன்னா (35). இவர் கடந்த மார்ச் மாதத்தில் லக்னோ பகுதியில் துப்புரவு தொழிலாளியாகப் பணிக்கு சேர்ந்து இருக்கிறார்.
அன்றிலிருந்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றும் பணியில் இவர் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக லக்னோ மாநகராட்சியின் மண்டல அதிகாரி திலீப் தே தெரிவித்து உள்ளார். இவரது அயராத உழைப்பால் இதுவரை 700 க்கும் மேற்பட்ட கொரோனா உடல்களை பைகுநாத் தாம் பகுதியில் உள்ள மின்சார சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக அப்புறப் படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய முன்னா கடவுள் இந்த பணிக்கு என்னைத் தேர்வு செய்ததாகவே நினைக்கிறேன். என்னுடைய கடமையை நான் சரியாகச் செய்கிறேன். மேலும் நான் மேல்நிலை வகுப்பு வரைப் படித்து இருக்கிறேன். இதனால் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து எனக்கு தெரியும். அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றே பாதுகாப்பாக பணிபுரிந்து வருகிறேன்.
ஆனால் கடந்த 6 மாதமாக என்னுடைய குடும்ப உறுப்பினர்களை நான் நெருங்கவே இல்லை. ஒருவேளை எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அது அவர்களையும் தாக்கி விடுமோ என்ற காரணத்திற்காக நான் விலகியே இருக்கிறேன் என நெகிழ்ச்சிப் பொங்க தெரிவித்து இருக்கிறார். இதுபோன்ற மனித நேயமிக்க மனிதர்கள் இருக்கும்வரை மனித குலத்தின் வளர்ச்சி முன்னோக்கியே இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.