குழந்தைகளுடன் 'விடுதலை' படம் பார்த்த பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்.. போலீசார் எடுத்த நடவடிக்கை..!

  • IndiaGlitz, [Sunday,April 02 2023]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான ‘விடுதலை’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் சென்சாரில் ’ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளதை அடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே படம் பார்க்க அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு திரையரங்கில் குழந்தைகளுடன் ஒரு சிலர் படம் பார்க்க வந்திருந்ததை அடுத்து போலீசார் படத்தை பாதியில் நிறுத்தினர். இதனை அடுத்து 18 வயது மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த படம் பார்க்க தகுதியான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் சிறுவர் சிறுமிகளை அனுமதிக்க முடியாது என்று குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் சிறுவர்களை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும் என்றும் கூறினர்.

ஆனால் குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்கள் போலீசார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வளர்மதி என்ற பெண் தங்கள் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான படங்கள் காண்பிக்க வேண்டும் என்று தங்களுக்கு தெரியும் என பேசியதோடு அரைகுறை ஆடையுடன் பெண்கள் ஆடுவது போன்ற காட்சி உள்ள திரைப்படங்களை மட்டும் எப்படி சிறுவர் சிறுமிகளை அனுமதிக்கின்றீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் இது ஆபாச காட்சிகள் உள்ளதற்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் வன்முறை காட்சிகளுக்கு மட்டுமே ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். அவரை போல் ஒரு சில பெற்றோர் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வேறு வழியின்றி போலீசார் அப்போதைக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட ’விடுதலை’ படத்தை தனது குழந்தைகளுடன் பார்க்க அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்த வளர்மதி என்ற பெண்ணின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.