இந்து தீவிரவாதம் குறித்த சர்ச்சை: கமல் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு?
- IndiaGlitz, [Friday,November 03 2017]
உலகநாயகன் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த கட்டுரையில் இனியும் இந்து தீவிரவாதிகள் இல்லை என்று கூற முடியாது' என்ற ஒரு கருத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கமல் மீது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி முன்சிபல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். அவதூறு பரப்புதல், மதத்திற்கு எதிரான கருத்து தெரிவித்தல் உள்பட 5 பிரிவுகளில் கமல் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் இந்த வழக்கை பதிவு செய்த வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறியபோது, கமல்ஹாசனின் இந்த கருத்து தன்னுடைய மனதை புண்படுத்தியதாகவும், இதுவொரு சர்ச்சைக்குரிய கருத்து என்றும், இந்த கருத்தை கமல் வெளிப்படுத்தியிருக்க கூடாது என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்று கொள்ளப்படுமா? ஏற்றுக்கொள்ளப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது நாளைய விசாரணையின்போது தெரிந்துவிடும்