இயக்குனர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Sunday,May 13 2018]
கடந்த சில வாரங்களாகவே காவிரி பிரச்சனை, ஐபிஎல் போட்டி எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு உள்பட பல விஷயங்களுக்காக தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருபவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை என்ற அமைப்பின்மூலம் பல்வேறு போராட்டங்களை பாரதிராஜா நடத்தி வரும் நிலையில் அவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி திரைப்படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநா் பாரதிராஜா, விநாயகா் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என்று பேசியிருந்ததார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து மக்கள் முன்னணி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், 'பாரதிராஜா மீது வழக்கு தொடரும் வகையில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளா் வி.ஜி.நாராயணன் நேற்று வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வடபழனி காவல்துறையினர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பாரதிராஜாவிடம் போலீசார் விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.