'பிக்பாஸ் 3' திட்டமிட்டபடி நடக்குமா? சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு!
- IndiaGlitz, [Wednesday,June 19 2019]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் பேராதரவை பெற்றது. சீரியல் பார்க்கும் பெண்கள் கூட சீரியலை மறந்துவிட்டு இரவு 9 மணி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கியதால் இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் மோகன் வைத்யா கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மீதி 13 பேர்களின் பெயர்ப்பட்டியல் விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை 'ஐபிஎஃப்' என்ற இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது என்றும், இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் சுதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக கமல் வீட்டின் முன் ஒருசில அமைப்புகள் போராட்டம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.