விஜய்சேதுபதியை தாக்கினால் ரூ.1001: மிரட்டல் விடுத்த பிரபல அரசியல்வாதி மீது வழக்குப்பதிவு!

  • IndiaGlitz, [Wednesday,November 17 2021]

நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் ரூ.1001 பரிசு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் தேவர் ஐயா அவர்களை இழிவுபடுத்தியதற்காக விஜய்சேதுபதியை உதைப்பவர்களுக்கு ரூ.1001 பரிசு வழங்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பர் 7-ஆம் தேதி என்று இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தேவர் ஐயா அவர்களை இழிவுபடுத்தியதற்காக அவரை உதைப்பதற்கு ரூபாய் 1001/- பரிசு வழங்கப்படும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேற்படி பதிவு அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும், குற்றமுறு மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளது. எனவே இது தொடர்பாக நவம்பர் 17 ஆம் தேதியான இன்று பி1 கடைவீதி காவல்நிலையத்தில் அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.