மணிரத்னம் உள்பட 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு:
- IndiaGlitz, [Friday,October 04 2019]
பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மதத்தின் பெயரால் தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், இந்த தாக்குதல்களில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள முக்கிய எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என 50 பேர் கூட்டாக ஒரு கடிதம் எழுதி அனைவரும் கையெழுத்திட்டு அதை பிரதமர் மோடிக்கு அனுப்பினர். இதில் இயக்குனர் மணிரத்னம் கையெழுத்தும் இருந்தது. மணிரத்னம் கையெழுத்திட்டதை அவரது மனைவி சுஹாசினியும் உறுதி செய்தார்.
இந்த நிலையில் தேசத்தை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடிக்கு எதிராக கடிதம் எழுதி கையெழுத்திட்ட மணிரத்னம் உள்பட 50 பேர்கள் மீது தற்போது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்தை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கை வைத்தவர்கள் மீதே தேசத்துரோக வழக்கா? என்ற கேள்வியை சமூக வலைத்தள பயனாளிகள் எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக 50 பேர் கையெழுத்திட்ட இந்த கடிதத்திற்கு எதிராக வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். பிரதமருக்கு எழுதிய இந்த கடிதம் நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போல் இருப்பதாகவும், பிரதமர் மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவது போல் இருப்பதாகவும் எனவே 50 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.