பிரபு-ராம்குமார் மீதான சிவாஜி மகள்களின் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
- IndiaGlitz, [Monday,October 17 2022]
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் மீது சிவாஜி கணேசன் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி பதிவு செய்த வழக்கில் முக்கிய உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கு தராமல் தங்களது சகோதரர்கள் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றிவிட்டதாக சிவாஜிகணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மரணத்திற்குப்பின் 270 கோடி ரூபாய் சொத்துகளை முறையாக நிர்வாகம் செய்யவில்லை என்றும் தங்களுக்குரிய பங்கை ராம்குமார், பிரபு வழங்காமல் ஏமாற்றியதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜி கணேசனின் மகள்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர்.
மேலும் தங்களது தந்தை சிவாஜிகணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது என்றும் தங்களுக்கு தெரியாமல் சாந்தி தியேட்டர் சொத்தை பிரபு மற்றும் ராம்குமார் விற்றுள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் தங்கள் மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரி சிவாஜிகணேசன் மகள்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.