தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு கிளம்பு எதிர்ப்பு… உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரிக்குமா???
- IndiaGlitz, [Monday,November 02 2020]
சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டங்களினால் இளைஞர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்திலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. காரணம் கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஆன்லைனில் கேம் விளையாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து அது சூதாட்டமாக மாறும் எண்ணிக்கையும் உயர்ந்து இருக்கிறது.
தமிழகத்தில் கிரிக்கெட் சூதாட்டம் போன்ற பெரும்பாலான சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு மட்டும் இதுவரை அரசாங்கம் தடை விதிக்காமல் இருப்பதற்கு தற்போது கண்டனங்கள் எழும்பி இருக்கின்றன. இந்நிலையில் ஆன்லைனில் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க கோரும் கோரிக்கை ஒன்றை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் சமர்ப்பித்து இருந்தார்.
இந்த கோரிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், முறையீட்டுக்கு பதிலாக மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாகத் தெரிவித்து இருந்தனர். அதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி நாளை மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கசல் செய்யப்பட இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து மக்களும் எதிர்ப்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.