தேர்தல் முன்விரோதம் காரணமாக பயங்கர கலவரம்: வீடுகள், படகுகள் தீவைக்கப்பட்டதால் பரபரப்பு
- IndiaGlitz, [Sunday,August 02 2020]
தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் சகோதரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் அருகே 25க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடலூரை அடுத்த தாழங்குடா என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி அவர்களின் தம்பி மதிவாணன் திடீரென மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்தது தற்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மதியழகன் தரப்பினர் தான் என்று கூறப்பட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே திடீரென கலவரம் ஏற்பட்டது
இதனை அடுத்து மதிவாணனின் ஆதரவாளர்கள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மற்றும் மீன் வலைகளை தீ வைத்துக் கொளுத்தினர். அதேபோல் எதிர் தரப்பினரின் வீடுகளையும் கொளுத்தியதோடு அங்கிருந்த வாகனங்களையும் அடித்து உடைத்ததாக தெரிகிறது
இது குறித்து தகவல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பதற்றத்தை தணிக்க முயற்சித்தனர். மேலும் தீயணைப்பு துறையினரும் வந்து தீயினால் எரிந்து கொண்டிருந்த படகுகள் மற்றும் வீடுகளை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பேர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் சம்பவ இடத்தை விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் அவர்கள் நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது