உயிருக்குப் போராடிய அப்பா, தங்கை… ஒரு மணிநேரம் நீந்தியே காப்பாற்றிய 7 வயது ஹீரோ!
- IndiaGlitz, [Wednesday,June 02 2021]
அமெரிக்காவில் போட்டிங்கின்போது ஆற்றில் சிக்கிக் கொண்ட தனது அப்பாவையும் தங்கையையும் 7 வயது சிறுவன் சேஸ் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நீந்தியே அவர்களைக் காப்பாற்றிய சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேஸ் 1.5-2 கிலோ மீட்டர் தூரம் ஆற்றில் நீந்தி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஸ்டீவன் பவுஸ்ட் என்பவர் தனது 7 வயது சிறுவன் சேஸ் மற்றும் 4 வயது மகளைக் கூட்டிக்கொண்டு போட்டிங் சென்று இருக்கிறார். புளோரிடாவில் உள்ள ஜாக்சன்விஸில் செயின்ட் ஜான்ஸ் எனும் ஆற்றில் இவர்கள் தங்களது போட்டை நங்கூரம் இட்டு இருக்கின்றனர். அப்போது திடீரென போட்டின் பின்புறம் இருந்து வேகமாக அலை அடிக்கிறது. இதனால் அந்த போட் சரியத் தொடங்கி இருக்கிறது.
எனவே போட்டில் இருந்த 4 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கத் தொடங்குகிறார். இதைப் பார்த்து பதறிப்போன சேஸ் முதலில் தனது அப்பாவிடம் எச்சரிக்கிறான். ஆனால் தண்ணீரில் மூழ்கிய தங்கை மற்றும் அப்பா இருவருமே கண நேரத்தில் காணாமல் போகின்றனர். இதனால் பயந்துபோன சிறுவன் சேஸ் லைஃப் ஜாக்கெட் போட்டு இருக்கும் தைரியத்தில் கரையை நோக்கி நீந்தத் தொடங்கி இருக்கிறான். இப்படி நீந்தத் தொடங்கிய அவன் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு பின்பு கரையில் இருந்து ஒரு வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியிருக்கிறான்.
இதனால் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அந்த இடத்திற்கு வேகமாக விரைந்து இருக்கிறது. அவர்களின் உதவியால் சேஸின் அப்பா, தங்கை என இருவரும் தற்போது பத்திரமாகக் காப்பாற்றப் படுகின்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்த அமெரிக்க ஊடகங்களில் சேஸ் ஒரு ஹீரோவாக வலம் வருகிறார்.
இந்நிகழ்வை அடுத்து எப்படி இவ்ளோ தூரம் நீந்தினீர்கள் என சேஸிடம் கேட்கப்பட்டு இருக்கிறது. இதற்குப் பதில் அளித்த சிறுவன் நான் இதை எப்படி செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை எனக் கூறி மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறான்.