24 மணி நேரத்தில் 991 பேருக்கு பாசிட்டிவ்: ஊரடங்கையும் மீறி இந்தியாவில் பரவும் கொரோனா

கொரோனா பரவுதலை தடுப்பதற்காக கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 3 வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பரவுவதலை தடுப்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 991 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட 14,378 பேரில் 4,291 பேர் ஒற்றை தொடர்புடையவர்கள் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனாவால் இதுவரை இந்தியாவில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் 23 மாநிலங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது என்றும், மாஹே (புதுவை) & குடகு (கர்நாடகா) மாவட்டங்களில் கடந்த 28 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பில்லை என்றும், 45 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.