கொரோனாவில் இருந்து மீண்ட 96 வயது மூதாட்டி: ஆச்சரிய தகவல்கள்

உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை இதுவரை பலி வாங்கியுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்பதால் முதியோர்களையும் குழந்தைகளையும் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளும்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களை கொரோனா மிக எளிதாக தாக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் ஒரு அரிய தகவலாகவே கொரோனா தொற்றுக்கான ஆளான 96 வயது மூதாட்டி ஒருவர் அந்த தொற்றில் இருந்து முற்றிலும் குணமாகி மீண்டு வந்துள்ளார். தென்கொரியாவை சேர்ந்த 96 வயது மூதாட்டி ஹூவாங் என்பவர் சமீபத்தில் கொரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் நம்பிக்கையுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு தற்போது முழுமையாக குணமடைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றும் வெகுவிரைவில் அவர் வீட்டுக்கு செல்வார் என்றும் செய்த்கிகள் வெளிவந்துள்ளது. கொரோனாவில் இருந்து 96 வயது மூதாட்டி ஒருவர் குணம் அடைந்து உள்ளது அனைவருக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.