Premkumar in his debut has attempted a never before seen love story in which the lead pair dont even say "I love you" anywhere. The maturity he has shown in his writing and execution reminds one of none other than the Iyakkunar Sigaram K. Balachander. Period! 2018 | U (India)
96: பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்லும் காதல் கவிதை
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வெளிவந்தாலும் ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே நம் மனதில் ஆழமாக பதியும். குறிஞ்சி பூ போல் வெளிவந்திருக்கும் திரைப்படங்களில் ஒன்றுதான் இந்த '96' திரைப்படம்.
தொழில்முறை புகைப்பட கலைஞரான விஜய்சேதுபதி, தன்னுடைய பணியின் பொருட்டு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது ஒருமுறை தற்செயலாக தனது சொந்த ஊரான தஞ்சைக்கு வருகிறார். தான் படித்த பள்ளியை பார்த்து மலரும் நினைவுகளில் மூழ்கும் விஜய்சேதுபதி, தனது பள்ளி நண்பர்களுக்கு தனது அனுபவத்தை செல்போன் மூலம் கூறுகிறார். அப்போது மீண்டும் அனைவரும் சந்திப்பது என முடிவு செய்து தேதியை பிக்ஸ் செய்து இரண்டு மாதம் கழித்து சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் பள்ளி பருவத்தில் காதலித்து பின் சந்தர்ப்பவசத்த்தால் பிரிந்த த்ரிஷாவை சந்திக்கின்றார் விஜய்சேதுபதி. இந்த சந்திப்புக்கு பின் ஒரே ஒரு இரவில் நடக்கும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் தான் இந்த படத்தின் மீதிக்கதை
சமீபத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் ஒரு டெர்ரனான நக்கலான போலீஸ் அதிகாரியாக பார்த்த ரசூல் கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதிக்கும், இந்த படத்தின் ராம் கேரக்டருக்கும் ஒரு ஒற்றுமையை கூட பார்க்க முடியாது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் வெறித்தனமான நடிகர் விஜய்சேதுபதி. த்ரிஷாவை முதன்முதலில் பார்க்கும்போது படபடப்பது, அவருடன் பேச முடியாமல் திணறுவது, த்ரிஷா சாப்பிடவில்லை என்று கூறியவுடனே எழுந்து போய் சாப்பாடு கொண்டு வருவது, ஒரு இரவு முழுவதும் த்ரிஷாவுடன் சுற்றினாலும் ஒரு இடைவெளியை மெய்ட்டன் செய்வது, கிளைமாக்ஸில் வசனம் அதிகம் இல்லாமல் கண்களாலே கோடி வசனம் பேசுவது என விஜய்சேதுபதி ஒரு நடிப்பு ராஜ்ஜியமே நடத்திவிட்டார். இப்படி ஒரு நடிகரை பெற்றதற்கு தமிழ் சினிமா பெருமைப்பட வேண்டும்
த்ரிஷாவின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும். படம் ஆரம்பித்து வெகுநேரம் கழித்து இவருடைய கேரக்டர் அறிமுகமானாலும் அதன்பின் முழுக்க முழுக்க பார்வையாளர்களை ஆக்கிரமித்தது இவருடைய கேரக்டர்தான். விஜய்சேதுபதியை 'நீ இன்னும் வெர்ஜினா? என்று கிண்டலுடன் கேள்வி கேட்பது, விஜய்சேதுபதியின் மாணவர்களிடம் தன்னுடைய காதல் கதையை பாசிட்டிவ்வாக மாற்றி சொல்வது, தன்னுடைய திருமணத்தின்போது விஜய்சேதுபதி வந்திருந்ததை அறிந்து உடைந்து நொறுங்குவது என த்ரிஷாவின் நடிப்பில் ஒரு உச்சம் தெரிகிறது.
பள்ளி பருவத்து விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷாவாக நடித்திருக்கும் ஆதித்ய பாஸ்கர், மற்றும் கெளரி கிஷான் ஆகிய இருவரின் நடிப்பு அருமை. இருவரும் கண்களாலும் சைகையாலும் பேசிக்கொள்ளும் பாணி, 90களில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். அதேபோல் சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருக்கும் அவருடைய மகள் நியாதி உள்பட குழந்தை நட்சத்திரங்கள் அனைவரையும் இயக்குனர் சரியாக பயன்படுத்தியுள்ளார்.
பகவதி பெருமாள், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் படத்தின் நகைச்சுவைக்கு உதவுகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின் ஜனகராஜ் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் மனதில் நிற்கின்றார்.
இந்த மாதிரி ஒரு உணர்ச்சிமயமான ரொமான்ஸ் படத்திற்கு பின்னணி மிக முக்கியம். இசைஞானி போன்றவரகள் மட்டுமே இந்த படத்திற்கு பின்னணி அமைக்க முடியும் என்றாலும் இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் எந்த குறையும் வைக்கவில்லை. சில இடங்களில் இவர் பயன்படுத்திய மெளனம் ஓராயிரம் இசைக்கு சமம். அதேபோல் பாடல்கள் என தனியாக இல்லாமல் காட்சி அமைப்புடன் இருப்பதும் சிறப்பு.
மகேந்திரன் ஜெயராஜு மற்றும் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு ஒரு மெல்லிய காதல் சரித்திரத்தை மிக அழகாக படம் பிடித்துள்ளது. விஜய்சேதுபதி போட்டோகிராபராக இருக்கும் முதல் பத்து நிமிடங்கள் காட்சிகளின் கவிதை. கதையின் ஒட்டத்திற்கு ஏற்ற படத்தொகுப்பு கனகச்சிதம்
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் பள்ளி பருவத்திற்கே அழைத்து சென்றுவிட்டார். விஜய்சேதுபதி தான் படித்த பள்ளிக்கு சென்று உணரும் ஒவ்வொரு அனுபவமும் பார்வையாளர்களில் பலரும் அனுபவித்திருப்பார்கள். படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும் ஒரு காட்சியில் கூட சலிப்பு வராமல் திரைக்கதையை சின்னச்சின்ன டுவிஸ்ட்டுகள் மூலம் நகர்த்தி சென்றதில் இயக்குனரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. குறிப்பாக த்ரிஷா, விஜய்சேதுபதியின் மாணவர்களுக்கு கூறும் காதல் கதையில் இருந்து பார்வையாளர்களுக்கு இந்த கதைக்கு இன்னொரு வடிவம் கொடுத்தது பிரமிக்க வைக்கின்றது. கமர்ஷியல் அம்சங்களை வலிய திணிக்காமல் ஒரு படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யத்துடனும் கொண்டு செல்ல முடியும் என்பதை இயக்குனர் பிரேம் நிரூபித்துவிட்டார். இந்த படத்தை பார்த்துவிட்டு பலர் தாங்கள் படித்த பத்தாம் வகுப்பு நண்பர்களுக்காக வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்கலாம், பள்ளி பருவத்தில் வந்த காதலை மனதில் அசை போடலாம்.
மொத்தத்தில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடனும் மறக்க முடியாமல், பலமணி நேரம் நம்மை இளவயது நினைவுகளில் மூழ்க வைக்கும் அருமையான காவியம்
Comments