18 வருடங்களுக்கு பின் தமிழுக்கு விருது பெற்று கொடுத்த '96' திரைப்படம்
- IndiaGlitz, [Sunday,March 17 2019]
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கோலப்புடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதில் இந்தியாவின் அனைத்து மொழி திரைப்படங்களும் பங்கு பெறுவதுண்டு.
அந்த வகையில் இந்த ஆண்டு கோலப்புடி ஸ்ரீனிவாஸ் அறிமுக இயக்குனர் விருதினை 96 திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்த 'குட்டி' என்ற திரைப்படத்திற்காக ஜானகி விஸ்வநாதன் என்பவர் இந்த விருதினை பெற்றார். அதன்பின் 18 ஆண்டுகள் கழித்து '96 திரைப்படம் தமிழுக்கு இந்த விருதை பெற்று கொடுத்துள்ளது. ரூ.1.5 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் இயக்குனர் பிரேம்குமாருக்கு வரும் ஆகஸ்ட் மாதம் விருதாக வழங்கப்படும்.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பிரேம்குமார், '96' படத்தின் மூலம் இயக்குனரானார் என்பதும் இந்த படம் அனைத்து தரப்பினர்களாலும் பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் வெற்றியால் தற்போது தெலுங்கு, கன்னட மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.