ஆன்லைன் வகுப்பு வைக்க துடிக்கும் பள்ளிகள்- இணைய வசதியே இல்லாத 94% குழந்தைகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கடந்த மார்ச் 23 இரவு முதல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வு கொண்டு வரப்பட்டு இருந்தாலும் வரும் டிசம்பர் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தைப் போல அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டினை வீணாக்கி விடக்கூடாது எனத் தற்போது பல கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் பாடங்களை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன. பல தனியார் கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் இந்தியாவின் குழந்தைகள் உரிமை அமைப்பு (சி.ஆர்.ஒய்) நடத்திய ஒரு ஆய்வில் தென்னிந்தியாவைச் சேர்ந்த 4 மாநிலங்களில் 94% குழந்தைகளிடம் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவையான இணைய வசதி இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மே-ஜுன் மாதங்களில் இந்திய மாணவர்களிடம் உள்ள இணைய ஆற்றல் திறனை தெரிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் 94% மாணவர்களிடம் ஆண்ட்ராய்ட் அல்லது இணைய வசதி இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பெரும்பாலான குழந்தைகளின் கல்வி தற்போது கேள்விக்குறியாக மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சி-ஆர்.ஓய் நடத்திய ஆய்வில் 94% மாணவர்களிடம் ஆண்ட்ராய்ட் அல்லது இணைய வசதி இல்லாமல் இருக்கிறது. அவர்களில் 29% குழந்தைகளின் பெற்றோர்கள் செல்போன்களை வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் எல்லா நேரங்களில் இக்கருவிகளை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலைமையும் இருந்து வருகிறது. 55% குழந்தைகளுக்கு வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் செல்போன்களை பயன்படுத்த அனுமதி கிடைக்கிறது என்றும் 77% குழந்தைகளுக்கு வாரத்தில் 2 மணி நேரத்திற்கும் குறைவான அளவே செல்போன் போன்ற கருவிகள் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் 6% மாணவர்கள் மட்டும் சொந்தமாக ஆண்ட்ராய்ட் அல்லது இணைய வசதிக்கான மென்பொருளை வைத்திருக்கின்றனர் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
11-18 வயதுடைய மாணவர்களிடம் காணப்படுகிற இணைய வசதி குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பல குடும்பங்கள் ஆண்ட்ராய்ட் போனை ஆடம்பர வசதியாக மட்டுமே கருதுவதும் தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி தகுதியில் பெரிய அளவிலான தடைகள் ஏற்படும் எனவும் அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கர்நாடகத்தில் 1,445 பேருக்கு 9 பேர் மட்டுமே செல்போனை வைத்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 1,740 பேருக்கு 3 என்ற அளவில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. சி.ஆர்.ஓய் அமைப்பின் தென் மண்டல இயக்குநர் கார்த்திக் நாராயணன் இந்த ஆய்வுக் குறித்து கூறும்போது, ஆன்லைன் வகுப்புகளினால் ஏற்கனவே சமூகத்தின் கட்டமைப்புகளில் இருந்து ஒதுங்கியிருக்கும் மாணவர்கள் மேலும் அதிகளவு பாதிக்கப்படுவார்கள் என்றும் கவலை தெரிவித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com