மாணவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி… உண்மையில் நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பீகார் மாநிலத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருந்த தகவல் நேற்று முதல் பரபரப்பை கிளப்பி வருகிறது. இதையடுத்து அதிர்ந்துபோன வங்கி அதிகாரிகள் கணிணி செயல்பாட்டில் கோளாறு நடைபெற்றுள்ளது. உண்மையில் அந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சத் தொகை மட்டுமே உள்ளது. ஆனால் கணிணி கணக்கில் தவறுதலாக காட்டுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என விளக்கம் அளித்துள்ளனர்.
பீகார் கதிஹார் மாவட்டம் பாஸ்தியா கிராமத்தில் வசித்துவரும் சிறுவர்கள் குரு சந்திர பிஸ்வாஸ் மற்றும் ஆஷிஷ் குமார். அரசு பள்ளியில் படித்துவரும் இவர்களுக்கு பள்ளியின் சார்பாக உத்தர் பீகார் கிராம வங்கியில் வங்கிக் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது. இந்த வங்கிக் கணக்கில் சீருடை மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை வாங்குவதற்காக அவ்வபோது பணம் செலுத்தப்படும். இந்நிலையில் தங்களுடைய வங்கிக் கணக்கில் அளவுக்கடந்த பணம் இருப்பதை சிறுவர்கள் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி வாயிலாக தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து சிறுவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் விஷயத்தை தெரிவித்து உள்ளனர். இதனால் வங்கிக்கு விரைந்த பெற்றோர்கள் சிறுவர்களின் வங்கிக் கணக்கை சரிப்பார்த்துள்ளனர். அதில் வெறும் குறைந்தப்பட்சத் தொகை மட்டுமே இருப்பதாக வங்கி மேலாளர் மனோஜ் குப்தா விளக்கம் அளித்துள்ளார். ஆனால் குறுஞ்செய்தியில் குரு சந்திர பிஸ்வாயின் வங்கிக் கணக்கில் 90,50,21,223 கோடி பணம் இருப்பதாகவும் ஆஷிஷ் குமாரின் வங்கிக் கணக்கில் 60 கோடி பணம் இருப்பதாகவும் காட்டியுள்ளது.
இதனால் அதிர்ந்துபோன வங்கி மேலாளர் கணிணி செயல்பாட்டில் கோளாறு இருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்துகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைப் போன்றே கடந்த சில தினங்களுக்கு முன்பு ககாரியா மாவட்டம் பக்தியார்பூர் கிராமத்தில் வசித்துவந்த ரஞ்சித்தாஸ் என்பவரின் வங்கிக் கணக்கில் வங்கி அதிகாரிகள் தவறுதலாக ரூ.5.5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்து விட்டனர். இந்தப் பணத்தை உடனடியாக செலவழித்துவிட்ட ரஞ்சித்தாஸ், வங்கி அதிகாரிகள் திரும்பப் பணத்தைக் கேட்டபோது தடாலடி பதில் அளித்து அனைவரையும் அலறச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout