கொரோனாவில் இருந்து விடுபட்ட நூற்றுக்கு 90 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கு… பகீர் தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

 

கடந்த டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலாக வுஹான் மாகணத்தின் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா பரவியதாகக் கூறப்படுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்டு 7 மாதங்களை கடந்து விட்ட பின்பும் கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வரப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பரவி, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி, கொத்துக் கொத்தாக மனித உயிர்களை பலிவாங்கும் பெருந்தொற்றாகவும் இது மாறிவிட்டது. இதனால் மனித குலம் இப்பெருந்தொற்றில் இருந்து எப்போதுதான் வெளிவருமோ என்ற மலைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தனை அதிர்ச்சியும் பத்தாது என்று தற்போது வுஹான் மாகாணத்தில் உள்ள ஜாங்னான் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது தகவலை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் கொரோனாவில் இருந்து மீண்ட 90 விழுக்காடு மக்களிடம் நுரையீரல் குறைபாடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் சராசரி வயது 59 என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் முதன் முதலாகப் பாதிக்கப்பட்ட வுஹான் நகரத்து மக்களை கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கடந்த ஜுலை மாதம் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடல் பரிசோதனையில் 90 விழுக்காடு கொரோனா பாதித்த மக்களுக்கு அவர்களின் நுரையீரல் மிகவும் பழுதடைந்து இருப்பதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் பெரும்பாலும் நுரையீரல் காற்றோட்டம், வாயு பரிமாற்ற செயல்பாடு போன்ற பாதிப்புகள் இருப்பதாகவும் அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. மேலும் பெரும்பாலான கொரோனா பாதித்த மக்கள் இன்றைக்கும் ஆக்சிஜன் எந்திரங்களை நம்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத்தவிர பீஜிங் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் டோங்ஸிமென் மருத்துமனையைச் சார்ந்த மருத்துவர் டெங்லியாங் கொரோனாவில் இருந்து மீண்ட 65 வயதுக்குட்பட்ட 10 விழுக்காட்டு மக்களுக்கு உடலில் முற்றிலும் நோய் எதிர்ப்பு சக்தி மறைந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.