90 ML Review
90ML: ஓவியாவின் ஒன்வுமன் ஷோ
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு இந்த படத்தின் புரமோஷன் வீடியோக்கள் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியதால் அதிகாலை காட்சி திரையிடப்படும் அளவுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்
புதியதாக ஒரு அபார்ட்மெண்டுக்கு திருமணமாகாமல் லிவ்-இன் ரிலேஷனில் இருக்கும் தனது காதலருடன் குடி வருகிறார் ரீட்டா (ஓவியா). அதே அபார்ட்மெண்டில் குடியிருக்கும் நான்கு பெண்கள் ஓவியாவுக்கு தோழிகள் ஆகின்றனர். இந்த நிலையில் நான்கு தோழிகளுக்கும் ஒவ்வொரு பிரச்ச்னை உள்ளது. எப்போது ஜெயிலுக்கு போவான், அல்லது எப்போது கொலை செய்யப்படுவான் என்று தெரியாமல் ரெளடியுடன் வாழ்க்கை நடத்தும் ஒருவர், திருமணம் ஆகியும் தன்னுடன் உறவு கொள்ள மறுக்கும் கணவனை கொண்ட ஒருவர், காதல் நிறைவேற தடையாய் இருக்கும் பெற்றோர் என்ற கவலையில் ஒருவர், பெற்றோர்கள் நிச்சயம் செய்த திருமணத்தை வேண்டாவெறுப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் என்பதுதான் அந்த நால்வருக்கும் உள்ள நான்கு பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளை ஓவியா கொடுக்கும் தைரியத்தால் அந்த பெண்கள் எப்படி சமாளிக்கின்றனர் என்பதுதான் மீதிக்கதை
லிவிங் ரிலேஷனில் சுதந்திரமாக தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழும் கேரக்டர் ஓவியாவுக்கு. திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொண்டால் நான் மாறிவிடுவேன். நான் நானாக வாழ வேண்டும் என்ற கேரக்டரை ஓவியா அசால்ட்டாக செய்துள்ளார். காதலன் திருமணம் செய்ய வற்புறுத்தும்போது முடியாது என் போல்டாக மறுப்பது, திருமணத்திற்கு மறுத்தால் பிரேக் அப் என காதலன் கூறும்போது அசால்ட்டாக 'போகும்போது வீட்டுச்சாவியை வச்சிட்டுப்போ' என்று கூறுவது என ஓவியாவின் டச் ஆங்காங்கே உண்டு.
ஓவியாவின் தோழிகளாக நடித்திருக்கும் நால்வரும் நடிப்பில் ஓகே. காமெடி, ரொமான்ஸ், இரட்டை அர்த்த வசனம், என இந்த நால்வரால் படம் கொஞ்சம் கலகலப்பாக போகிறது என்பது உண்மை
சிம்புவின் இசையில் பின்னணி ஓகே என்றாலும் 'மரண மட்ட' பாடல் தவிர் ஒரு பாடல் கூட படத்தில் தேறவில்லை. அவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது ரசிகர்களுக்கு நல்லது
நாட்டில் பல இடங்களில் நடக்கும் ஆனால் மறைக்கப்படும் விஷயங்களை இயக்குனர் அழகிய அசுரா தைரியமாக இந்த படத்தில் கூற முயற்சித்துள்ளார். லிவ் இன் ரிலேஷன்ஷிப், லெஸ்பியன் காதல் அதில் உள்ள பிரச்சனைகள் ஆகியவை குறித்த படமெடுக்க ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியத்திற்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனால் அதே நேரத்தில் ஆண்கள் செய்வதை தைரியமாக பெண்களும் செய்யலாம் என்ற சுதந்திரத்தின் அடிப்படையில் மது, சிகரெட், கஞ்சா ஆகியவைகளை பெண்களும் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் காட்சிகள் தேவையா? மற்ற படங்களில் மது, சிகரெட் இருக்கும் காட்சிகளின் கீழே டைட்டில் வரும். இந்த படத்தில் அந்த டைட்டில் கிட்டத்தட்ட நிரந்தரமாக இருக்கின்றது
இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டே தவறில்லை என்று கூறிய லெஸ்பியன் உறவை நியாயப்படுத்துவது, திருமணம் ஆனாலும் பிடிக்காத வாழ்க்கையை வாழ வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவை போல்டாக எடுப்பது, பிரேக் அப்-ஐ சர்வ சாதாரணமாக எடுத்து கொள்வது போன்ற காட்சிகள் இன்றைய இளம்பெண்களை கவர்ந்தால் படம் நிச்சயம் வெற்றிதான். இன்றைய காலத்து பெண்கள் தைரியமான முடிவை எடுப்பவர்களாக இருப்பதை இந்த படம் கோடிட்டு காட்டியுள்ளது. கலாச்சாரம் பேசுபவர்களுக்கு இந்த படம் சுத்தமாக பிடிக்காது. ஆனால் யதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்க்கையை நம் இஷ்டம் போல் அனுபவித்து வாழ வேண்டும் என்ற் கேரக்டர் உள்ள பெண்களுக்கு இந்த படம் பிடிக்கும். யாருமே எதிர்பாராத அந்த இடைவேளை காட்சி, மனநல மருத்துவர் தேவதர்ஷினி காட்சிகள் ஆகியவை இயக்குனரின் திரைக்கதை திறமையை காட்டுகிறது.
இயக்குனர் தான் சொல்ல வந்த கருத்தை நச்சென்று ஒருசில காட்சிகளில் கூறினாலும் தேவையில்லாத போரடிக்கும் காட்சிகள் அதிகம். பாடல்கள் மற்றும் தேவையில்லாத காட்சிகளை எடிட் செய்துவிட்டு ஒன்றரை மணி நேர படமாக மாற்றினால் நிச்சயம் இந்த படம் ஒரு வித்தியாசமான படமாக கருதப்படலாம்.
மொத்தத்தில் கலாச்சாரத்தை கண்டுகொள்ளாமல் வாழ்க்கையை அனுபவித்து வாழ விரும்பும் பெண்கள் இந்த படத்தை பார்க்கலாம்
- Read in English