தங்கையின் கடைசி ஆசை… 9 கோடி ரூபாயை திருப்பதி கோவிலுக்கு நன்கொடை வழங்கிய அக்கா!
- IndiaGlitz, [Friday,February 18 2022]
சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் திருமணம் செய்துகொள்ளாத நிலையில் இறக்கும்போது தன்னுடைய சொத்துகளை எல்லாம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்று தனது அக்காளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளின்படி ரூ.9.20 கோடி சொத்துக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளன.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பருவத்தம்மாள். இவர் உடல் ஊனமுற்ற நிலையில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். மேலும் தனது வாழ்நாள் முழுக்க சம்பாதித்த பணத்தை வைத்து 2 வீடுகள் மற்றும் வங்கியிலும் பணத்தை சேகரித்து வைத்துள்ளார். அவர் உயிரிழப்பதற்கு முன்பு தனது அக்காள் ரேவதி விஸ்வநாத்தைச் சந்தித்து தன்னுடைய சொத்துக்களை எல்லாம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொடுத்துவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் 76 ஆவது வயதில் கடந்த ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தனது தங்கையின் வேண்டுகோளிற்காக தற்போது ரேவதி தனது குடும்பத்துடன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றதோடு பருவத்தம்மாளின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 கோடி 20 லட்சத்தை தேவஸ்தான அறங்காவல் தலைவரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் ரூ.6 கோடி மதிப்புள்ள 2 வீடுகளுக்கான பத்திரங்களையும் அவர் ஒப்படைத்துள்ர்.
இதையடுத்து தங்கை பருவத்தம்மாளின் கடைசி ஆசையை நிறைவேற்றி மனநிறைவோடு ரேவதி நிம்மதியடைந்திருக்கிறார். தொடர்ந்து இவர் நன்கொடையாக வழங்கிய பணத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் சார்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.