25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு எழுதி வைக்கத் துடிக்கும் மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்!!!

 

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி ஒருவர் தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை பிரதமர் மோடி பெயருக்கு மாற்றி எழுதி வைக்க வேண்டும் எனக்கூறி நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த விஷயத்தைக் கேட்ட அதிகாரிகள் பலரும் ஆச்சர்யம் அடைந்து மூதாட்டியை சமாதானப் படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

அம்மாநிலத்தின் மெயின்பூரி மாவட்டத்தில் உள்ள கிஷ்னி கிராமத்தில் வசித்து வருகிறார் பிட்டன் தேவி (85) எனும் மூதாட்டி. இவரது கணவர் புரான்லால் பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு 2 மகன்கள் மற்றும் மருமகள்கள் இருந்தும் யாரும் இந்த மூதாட்டியை சரியாக கவனிப்பதில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்நிலையில் வயது முதிந்தோருக்கு மத்திய அரசு வழங்கி வரும் உதவித் தொகையை வைத்தே தனது வாழ்க்கையை நடத்தி வருவதாகக் பிட்டன்தேவி கூறியுள்ளார்.

இதனால் தன்னை யாரும் கவனிப்பதில்லை என ஆதங்கப்பட்ட பிட்டன் தேவி உள்ளூரில் வசித்து வரும் ஒரு வழக்கறிஞரை அணுகி இருக்கிறார். அவரிடன் தனது 25 ஏக்கர் நிலத்தை பிரதமர் பெயருக்கு மாற்றி எழுதி வைக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறார். இதைக் கேட்ட அந்த வழக்கறிஞர் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் வீட்டிற்கு சென்ற பிட்டன்தேவி தனது கருத்தில் சிறிதும் மாற்றம் அடையாமல் மெயின்பூரி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கே சென்று விட்டார்.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற பிட்டன்தேவி தன்னுடைய 25 ஏக்கர் நிலத்தை பிரதமர் மோடி பெயருக்கு மாற்றி எழுத வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட அதிகாரிகள் அதிர்ந்து போயிருக்கின்றனர். பிட்டன் தேவியை சமாதானப்படுத்த நினைத்த அதிகாரிகள் முடிவை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டு இருக்கின்றனர். ஆனால் கொஞ்சமும் சமாதானம் அடையாத அவர் உடனடியாக நிலத்தை மாற்றி பதிவு செய்ய வேண்டும் என ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார். இதனால் அங்குள்ள அதிகாரிகள் இதுபோன்ற விஷயங்களை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பின்புதான் செய்ய முடியும் என சாக்கு சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.