ஓடிடி'யில் ரிலீஸா? 'மாஸ்டர்' படத்தின் முடிவை எடுத்த '83' படக்குழு!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனை அடுத்து மே 3ஆம் தேதி பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு இல்லை என்றாலும் திரையரங்குகள் திறப்பதற்கு இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் ஒரு சில படங்கள் ஆன்லைனில் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இன்னும் ஒருசில நாட்களில் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து வேறு சில தமிழ் படங்களும் இந்தி படங்களும் ஒடிடி பிளாட்பாரத்தில் நேரடியாக வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற நிகழ்வை வைத்து தயாரிக்கப்பட்ட ’83’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என்ற செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆனால் படக்குழுவினர் தற்போது இது குறித்து விளக்கமளிக்கையில் ’தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிய ’83’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னரே ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஒரு முடிவைத்தான் விஜய் நடித்த மாஸ்டர்’ படத்தின் குழுவினர் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.