50 வருடம் கழித்து காதலருக்கு கடிதம் எழுதிய ஆஸ்திரேலியப் பெண்… 82 வயதிலும் மங்காத காதல் கதை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பல வடமாநிலங்களில் பேய் கிராமம் என்ற பெயரோடு இன்றைக்கும் ஆள்அரவம் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை பலமுறை செய்தித்தாள்களில் படித்து இருப்போம். அப்படியொரு கிராமம்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் எனும் மாவட்டத்தில் உள்ள குல்தாரா எனும் கிராமம். 85 குக்கிராமங்களுடன் இணைக்கப்பட்ட இந்தக் குல்தாரா கிராமம் கடந்த 13 நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கடந்த 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக அந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர்.
உண்மை இப்படியிருக்க பொதுமக்கள் இந்த கிராமத்தை விட்டு சென்றதற்கு அந்த ஊரில் பேய் நடமாட்டம் அதிகமாக இருந்ததாகவும் அதனால் வளர்ச்சி ஏதும் இன்றி மக்கள் அனைவரும் காலி செய்துகொண்டு சென்றுவிட்டதாகவும் பல நம்பிக்கை கதைகள் அந்தப் பகுதியில் கூறப்படுகிறது. இந்தப் பேய் கிராமத்தில் ஒரு மனிதர் மட்டும் வாழ்ந்து வருகிறார். அவரை கேட் கீப்பர் என்றே பெரும்பலான பத்திரிக்கைகள் அழைக்கின்றன.
இந்தக் கேட் கீப்பர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் பேய் கிராமத்தில் தொடர்ந்து இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஹியூமன் பாம்பே எனும் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் கடந்த 1970 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து மெரினா எனும் பெண் ஜெய்சால்மருக்கு வந்ததாகவும் அவரை பார்த்த அடுத்த கனமே இருவரது உள்ளத்திலும் காதல் மலர்ந்து விட்டதாகவும் கேட் கீப்பர் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதோடு 5 நாள் சுற்றுப்பயணமாக ராஜஸ்தானுக்கு வந்து இருந்த மெரினாவிற்கு கேட் கீப்பரே ஓட்டகத்தில் ஏறுவதற்கு கற்றுக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இப்படி பார்வையில் காதலை வளர்த்த இவர்கள் பிரியும்போது தங்களது காதலை ஒருவருக்கு ஒருவர் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற மெரினா தொடர்ந்து கேட் கீப்பருக்கு கடிதம் எழுதி ஆஸ்திரேலியாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்து இருக்கிறார். இதனால் அந்த காலத்திலேயே 30 ஆயிரம் ரூபாய் திரட்டி ஆஸ்திரேலியாவிற்கும் சென்று இருக்கிறார் நமது கேட் கீப்பர்.
ஆஸ்திரேலியாவிற்கு சென்ற கேட் கீப்பர் தனது காதலியுடன் கிட்டத்தட்ட 3 மாதங்கள் தங்கி இருக்கிறார். ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட் கீப்பர் கேட்டவுடன்தான் பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவை விட்டு என்னால் வரமுடியாது என மெரினாவும் நான் இங்கேயே தங்க முடியாத நிலைமையில் இருக்கிறேன் என கேட் கீப்பரும் கூற சிக்கல் முளைத்து அது பிரிவில் முடிந்து இருக்கிறது.
இதனால் மனம் நொந்துபோன கேட் கீப்பர் இந்தியாவிற்கு வந்து இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து மெரினாவுடன் கடிதம் வாயிலாக பேசி வந்துள்ளனர். இதற்கு இடையில் பெற்றோர்களின் வற்புறுத்தலினால் கேட் கீப்பருக்கு திருமணம், மனைவியுடன் 2 குழந்தைகள், அந்த 2 குழந்தைகளும் வளர்ந்து தற்போது அவர்களுக்கே பேரன், பேத்திகள் பிறந்து விட்ட நிலையில் 50 வருடங்கள் கழித்து மீண்டும் மெரினா கேட் கீப்பருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்ததோடு மீண்டும் இந்தியா வருவதாகவும் மெரினா தெரிவித்து உள்ளார். இதனால் குளிர்ந்து போன கேட் கீப்பர் நான் ஒருபோதும் எனது காதலை மறக்கவில்லை. இந்தக் கடிதம் கிடைத்தவுடன் மீண்டும் 30 வயது இளைஞனாகவே மாறிவிட்டேன். ஆனால் இந்தியாவிற்கு வரும் மெரினாவிற்கு எதிர்காலம் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை எனப் பதிவு செய்து இருக்கிறார். 50 வருடங்களைக் கடந்து பேய் கிராமத்தில் காதலிக்காக காத்து இருக்கும் கேட் கீப்பரின் காதல் கதை தற்போது ஊடகங்களில் கவனம் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout