கோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்
- IndiaGlitz, [Tuesday,October 31 2017]
கோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்
சரிதா:
70களின் இறுதியில் கே.பாலசந்தரின் 'தப்புத்தாளங்கள்' உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் 80களில் மார்க்கெட்டின் உச்சியில் இருந்த நடிகைகளில் ஒருவர். அனேகமாக கவர்ச்சி வேடங்களில் அதிகம் நடிக்காத நாயகி இவர் ஒருவராகத்தான் இருப்பார். இவர் நடித்த 'தண்ணீர் தண்ணீர்', மெளன கீதங்கள்', 'நெற்றிக்கண்', 'கீழ்வானம் சிவக்கும்', 'மலையூர் மம்பட்டியான், 'அக்னிசாட்சி', ''கொம்பேறி மூக்கன்', ''பூ பூவா பூத்திருக்கு' போன்ற பல படங்கள் கவர்ச்சியை நம்பியிராமல் சரிதாவின் நடிப்பை மட்டுமே நம்பி வெளிவந்த படங்கள் ஆகும்
மாதவி:
80களில் ஒரு நாயகி பிகினி உடையில் நடிப்பது என்பது அபூர்வமான விஷயம். ஆனால் துணிச்சலாக பாரதிராஜாவின் 'டிக் டிக் டிக்' படத்தில் பிகினி அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதனை தொடர்ந்து 'தில்லுமுல்லு', 'சட்டம்', 'தம்பிக்கு எந்த ஊரு', 'காக்கி சட்டை', 'விடுதலை' போன்ற படங்களில் கவர்ச்சி மற்றும் நடிப்பு என இரண்டையும் கலந்து கொடுத்த நடிகை
நதியா:
தமிழ் சினிமாவில் ஹீரோக்களை டம்மியாக்கிய முதல் நாயகி என்று இவரை சொல்லலாம். ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள தமிழ் சினிமாவில் நதியாவுக்காகவே ஓடிய படங்கள் பல. அவற்றில் 'பூவே பூச்சூடவா', உயிரே உனக்காக', 'நிலவே மலரே', 'போன்ற படங்களை கூறலாம். இருப்பினும் ரஜினியுடன் 'ராஜாதி ராஜா', 'பிரபுவுடன் 'சின்னத்தம்பி பெரிய தம்பி, 'ராஜகுமாரன், 'சத்யராஜூடன் 'மந்திரப்புன்னகை, 'சிவாஜி கணேசனுடன் 'அப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருடன் அதிக படங்களில் நடித்த ஹீரோக்களில் சுரேஷும் ஒருவர்
ரேகா:
இயக்குனர் இமயம் பாரதிராஜா கண்டுபிடித்த 'ஆர்' நாயகிகளில் ஒருவர். கடலோர கவிதைகள்' படத்தில் அறிமுகமான இவர் 'புன்னகை மன்னன்', 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'வீரன் வேலுத்தம்பி, 'மேகம் கருத்திருக்கு', 'என் பொம்முகுட்டி அம்மாவுக்கு'' என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் போன்ற வெற்றி படங்களில் நடித்தார்
ஸ்ரீதேவி:
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவை மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என இந்தியா முழுவதும் புகழ் பெற்ற நடிகை இவர். 16 வயதினிலே' படத்தில் நாயகியாக தொடங்கி சிகப்பு ரோஜாக்கள், ப்ரியா, குரு, ஜானி, மூன்றாம் பிறை, போக்கிரி ராஜா, வாழ்வே மாயம் என கமல், ரஜினி ஆகிய இருவருக்கும் ராசியான நாயகி ஆனார். இந்தி திரையுலகில் சுமார் பத்து வருடங்கள் நம்பர் ஒன் நாயகியாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஹாசினி:
கமல்ஹாசனின் குடும்பத்தில் இருந்து வந்த நடிக்க தெரிந்த நடிகைகளில் ஒருவர். 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய இவர் பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை, சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், தர்மத்தின் தலைவன், என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சிந்து பைரவி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர்
ரேவதி:
பாரதிராஜாவின் 'மண்வாசனை படத்தில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை ருசித்தவர். மீண்டும் பாரதிராஜாவின் இயக்கத்தில் 'புதுமைப்பெண், 'ஒரு கைதியின் டைரி போன்ற படங்களில் நடித்த இவர் கமல்ஹாசனின் புன்னகை மன்னன், ரஜினியின் 'கைகொடுக்கும் கை', மணிரத்னம் இயக்கிய 'பகல் நிலவு, 'மெளனராகம், அஞ்சலி, 'பாண்டியராஜனின் 'ஆண்பாவம்', சிவாஜியின் 'மருமகள்', மற்றும் அரங்கேற்ற வேளை, கிழக்கு வாசல், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ஜெயப்ரதா:
கே.பாலசந்தரின் 'மன்மதலீலை' படத்தில் தமிழில் அறிமுகமான இவர் அதன் பின்னர் நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி, சலங்கை ஒலி, உள்பட பல படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அம்பிகா:
கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த அம்பிகா அதன்பின்னர் சகலகலா வல்லவன், 'எங்கேயோ கேட்ட குரல், 'வெள்ளை ரோஜா, 'காதல் பரிசு, 'காக்கி சட்டை, 'இதய கோவில், 'படிக்காதவன், 'வாழ்க்கை, 'போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.
ராதா:
அம்பிகாவின் சகோதரியான இவர் பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். கமல்ஹாசனுடன் 'தூங்காதே தம்பி தூங்காதே' உள்பட பல படங்கள், ரஜினியுடன் 'பாயும் புலி' உள்பட பல படங்கள், கார்த்திக்குடன் 'அலைகள் ஓய்வதில்லை உள்பட பல படங்கள், 'பிரபுவுடன் 'ஆனந்த் உள்பட பல படங்கள், சத்யராஜுடன் 'அண்ணாநகர் முதல் தெரு' உள்பட பல படங்கள் என சில ஆண்டுகள் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார்