1210 பேர்களில் 806 பேர் நான்கு பகுதிகளில் மட்டும்: சென்னையில் கொரோனா நிலவரம்
- IndiaGlitz, [Monday,May 04 2020]
தமிழகத்திலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு நேற்று மட்டும் கொரோனாவால் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மற்ற மாவட்டத்தில் இருந்து சென்னை வந்தவர்களையும் சேர்த்து சென்னையில் மொத்தம் 1458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் தற்போது 1210 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்ட 1210 பேர்களில் 806 பேர்கள் நான்கே நான்கு பகுதிகளில் உள்ளவர்கள் என்பது சற்றுமுன் சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவலால் தெரிய வந்துள்ளது. திருவிக நகரில் 287 பேர்களும், ராயபுரத்தில் 200 பேர்களும், கோடம்பாகத்தில் 177 பேர்களும், தேனாம்பேட்டையில் 142 பேர்களும் என இந்த நான்கு பகுதிகளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 806 பேர்கள் உள்ளனர். எனவே சென்னை முழுவதும் பாதிப்பு என்ற நிலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பெருங்குடியில் 3 பேர்களும், ஆலந்தூர் மற்றும் சோலிங்கநல்லூரில் தலா 4 பேர்களும், மணலியில் 5 பேர்களும், மாதவரம் பகுதியில் 6 பெர்களும் என மிகக்குறைவாக கொரோனா பாதித்த பகுதியும் சென்னையில் உள்ளது. எனவே கொரோனா அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்தாமல் ஊரடங்கை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தினால் சென்னையில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.