இந்தியா முழுவதும் 80 மாவட்டங்கள் 31 ஆம்தேதி வரை முடக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நேற்று ஒருநாள் மட்டும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. அதேபோல, கொரோனா பாதிப்புள்ள 80 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன்படி அம்மாவட்டங்களில் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் மார்ச் 31 வரை நிறுத்தப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சக உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா மற்றும் பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா ஆகியோர் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று உரையாடினர். அந்த உரையாடலின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
அத்தியாவசியமற்ற சேவைகள் மட்டுமே 80 மாவட்டங்களில் முடக்கப் படுகின்றன. மளிகைச் சாமான்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றிற்கான சேவைகள் தொடர்ந்து கிடைக்குமாறு வழிவகை செய்யப்படும். பால், சமையல் எரிவாயு போன்றவை, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் கடைகள், ஏடிஎம்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் போன்றவை திறந்திருக்கும். அதேபோல குறைந்த அளவிலான பொது போக்குவரத்து சேகைள் கிடைக்குமாறு மாநில அரசுகள் பார்த்துக்கொள்ளும் எனவும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுக்க அனைத்து ரயில்கள், ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாநிலத்திற்குள்ளும் புறநகர் மெட்ரோ ரயில்களும் நிறுத்தப்பட உள்ளன. நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி நாடுமுழுவதும் 2400 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பபட உள்ளது. 1300 க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் நிறுத்தப்படும் எனவும் இந்திய ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பயணத்திற்கான டிக்கெட்டை பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு முழு கட்டணத்தொகையும் திருப்பி அளிக்கப்படும் எனவும் இந்திய ரயில்வே துறை நிர்வாகம் கூறியுள்ளது. அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட உள்ளன. ரயில்களில் பயணிகள் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் பயணம் செய்வதை அடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்படுவதாகவும் ரயில்வே துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் வரும் 31 வரை அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளும் முடக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். டெல்லி, மும்பை, பூனே, நாக்பூர், பெங்களூரு, மைசூர், ஹைதராபாத், கொல்கொத்தா, லக்னோ, ஆக்ரா, ஜபல்பூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், அகமதாபாத், வடோதரா, குர்கான், பரிதாபாத், சண்டிகர், விசாகப்பட்டிணம், விஜயவாடா உட்பட 80 மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் வரும் 31 ஆம் வரை மூடப்பட இருக்கிறது. பால், மருத்துவ சேவைகள், காய்கறி, மளிகை மற்றும் ஊடகம் உள்ளிடற்ற அத்யாவசிய சேவைகள் இந்த மாவட்டங்களில் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில நிர்வாகம் பார்த்துக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் முடக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மற்ற மாவட்டங்களுக்குச் செல்லவும் மற்ற மாவட்ட மக்கள் இந்த மாவட்டங்களுக்குள் உள்ளே வரவும் இயலாத வகையில் போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments