சாக்லேட் கொடுத்து ஏமாற்றி 8 வயது சிறுமியை நாசம் செய்த குடிகாரன்: அதிர்ச்சி தகவல்

பிரியங்கா ரெட்டி உள்பட பல இளம்பெண்களும், சிறுமிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டு வருவதாக தினந்தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால், இது பெண்களுக்கு பாதுகாப்பான நாடுதானா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பிரியங்கா ரெட்டியின் கொடூர சம்பவத்தையே இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில் இன்று 8 வயது சிறுமியை 34 வயது குடிகாரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்புர்கி என்ற கிராமத்தைச் சேர்ந்த 34 வயது குடிகாரன் எல்லப்பா என்பவன், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம், ‘என்னுடன் வந்தால் சாக்லேட் வாங்கி தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளான்.

சாக்லேட் ஆசையால் அந்த நபரின் பின்னால் சிறுமி சென்றபோது ஒரு புதர் மறைவில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான் எல்லப்பா. இந்த நிலையில் பள்ளிக்குச் சென்ற சிறுமி இன்னும் வீடு திரும்பவில்லை என்று பெற்றோர்கள் பதறி அடித்து பள்ளிக்குச் சென்ற போது, அன்றைய தினம் அந்த சிறுமி பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக விசாரணையை தொடங்கிய நிலையில் அந்த பகுதியின் பல இடங்களில் தேடிய போது புதர் ஒன்றின் மறைவில் சிறுமியின் உடைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அதன் அருகிலேயே ஒரு ஆணின் உள்ளாடையும் இருந்தது. இதனை அடுத்து மீண்டும் அந்த பகுதியை தேடியபோது சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது.

இது குறித்து நடந்த விசாரணையின்போது எல்லப்பா என்பவர் தான் சிறுமியை அழைத்துச் சென்றதைப் பார்த்ததாக சிலர் கூறினர். இதனை அடுத்து எல்லப்பாவின் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை செய்தபோது எல்லப்பா முழு போதையில் இருந்தான். அவனிடம் நடத்திய விசாரணையில் சாக்லேட் வாங்கி கொடுப்பதாக சொல்லி நான்தான் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்தான். இதனையடுத்து எல்லப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் மீதும் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வது என்றுதான் முடிவுக்கு வருமோ? என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.