8 வயதில் எழுத்தாளரான சிறுவன்… வரிசையில் காத்திருக்கும் வாசகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,February 05 2022]

அமெரிக்காவைச் சேர்ந்த 8 சிறுவன் எழுத்தாளராக மாறியுள்ளார். மேலும் இவருடைய புத்தகத்திற்காக 50 க்கும் மேற்பட்ட வாசகர்கள் காத்திருக்கும் நிகழ்வு கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இடாஹோ பகுதியைச் சேர்ந்த சிறுவன் தில்லன் ஹெல்பிக் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது பாட்டியிடம் இருந்து அற்புதமான காமிக்ஸ் புத்தகமொன்றை பரிசாகப் பெற்றுள்ளார். இந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்ட அந்தச் சிறுவன் எழுதுவதில் ஆர்வம் கொண்டு “தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் தில்லன் ஹெல்பிக்ஸ் கிரிஸ்மிஸ்“ எனும் காமிக்ஸ் கதையொன்றை எழுதியுள்ளார்.

81 பக்கம் கொண்ட அந்த புத்தகத்தை எழுதுவதற்கு தில்லன் 4 நாட்களை எடுத்துக்கொண்டாராம். கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து கிறிஸ்துமஸ் மரத்தை எடுத்துச் செல்லும் பயணம் குறித்து எழுதப்பட்ட இந்த புத்தகத்தை அந்தச் சிறுவன் தனது பாட்டியுடன் அடா கம்யூனிட்டி நூலகத்திற்குச் சென்றபோது அங்கிருந்த அலமாரியில் வைத்துள்ளார்.

பின்னர் தனது புத்தகத்தை சரிபார்த்தபோது அந்த அலமாரியில் இல்லாமல் போயிருக்கிறது. இதனால் பதறிப்போன சிறுவனை சமாதானப்படுத்திய நூலகர் உங்களுடைய புத்தகம் அற்புதமாக இருக்கிறது. 50 க்கும் மேற்பட்ட வாசகர்கள் தற்போது உங்களுடைய புத்தகத்தை வாசிப்பதற்காக பதிவு செய்திருக்கின்றனர். இதனால் நிரந்தரமாக நூலகத்திலேயே புத்தகத்தை வைக்க முடிவுசெய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து 8 வயதில் தனது எழுத்தால் வாசகர்களை ஈர்த்த சிறுவன் தில்லனை பலரும் பாராட்டி வருகின்றனர்.