Download App

8 Thottakkal Review

இயக்குனர் மிஸ்கினிடம் உதவிய இயக்குனராக இருந்துவிட்டு ‘8 தோட்டாக்கள்’ என்ற வித்தியாசமான தலைப்புடன் தன் முதல் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீகணேஷ். பல புதிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில் உருவாகியிருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் ட்ரைலர் கிளப்பியது. படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

வேறொருவர் செய்த கொலைக்கான பழி தன் மீது சுமத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான் சத்யா (வெற்றி). அங்கு அவன் மீது அக்கறை கொண்ட ஒரு அதிகாரியின் உதவியுடன் காவல்துறைப் பணியில் சேர்கிறான். ஆனால் அவன் வேலை பார்க்கும் காவல் நிலையத்தில் யாருடனும் எந்த ஒட்டுதலும் இல்லாமல் அமைதியாகத் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதால் சக ஊழியர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்  குணா (மைம் கோபி) ஆகியோரின் எதிர்ப்பைப் பெறுகிறான்.

தன்னால் பாதிக்கப்படும் ஒரு முதியவருக்கு (ஆர்.எஸ்.சிவாஜி) சத்யா உதவியதால் அவன் மீது கோபம் கொள்ளும் குணா அவனை  ஒரு குற்றவாளியைப் பின்தொடரும் கடினமான வேலைக்கு அனுப்புகிறான்.

அப்படிச் செல்கையில் அவனுக்கு தரப்பட்ட துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறான் சத்யா. அதனால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறான். சத்யா தொலைத்த துப்பாக்கி சில கைகளைக் கடந்து, மூர்த்தி (எம்.எஸ்.பாஸ்கர்)  என்பவனிடம் சிக்குகிறது. அதைவைத்து அவன் தன் கூட்டாளிகளுடன் ஒரு வங்கிக்கொள்ளையை நிகழ்த்துகிறான். ஒரு கொலையும் நடக்கிறது.

இந்த வங்கிக் கொள்ளை மற்றும் கொலை வழக்கின் விசாரணைக்குத் தலைமை தாங்கும் பாண்டியன் (நாசர்) சஸ்பெண்ட் செய்யப்பட்ட சத்யாவைத் தன் குழுவில் சேர்த்துக்கொள்கிறார். இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கையில் மூர்த்தியிடம் சிக்கிய துப்பாக்கியால் மேலும் சில கொலைகள் நடக்கின்றன.

மூர்த்தி யார்? அவன் இதையெல்லாம் செய்வதற்கான காரணம் என்ன? இதனால் சத்யாவுக்கு ஆவது என்ன? இதையெல்லாம் தெரிந்து கொள்ளப் படத்தைத் திரையில் பாருங்கள்.

ஒரு  தவறான கொலைப் பழியை சுமக்கும் சிறுவன் காவல்துறைப் பணியில் சேர்வது, அவனை தனக்கு நேர்ந்த அநீதியை மறந்து மற்ற மனிதர்கள் மீது அக்கறை இருப்பவனாகக் காண்பித்து தொடக்கத்திலேயே ஈர்ப்பைப் பெறுகிறார் அறிமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ். தொடர்ந்து நாயகனுக்கு ஒரு நிருபர் பெண்ணின் (அபர்ணா பாலமுரளி) நட்பு கிடைப்பது அந்த நட்பு காதலாக மலர்வது ஆகிய காட்சிகள் இயல்பாகவும் அழகாகவும் உள்ளன. துப்பாக்கி தொலைவதும் அதன் பயணமும்  யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் காட்சிப்பத்தப்பட்டிருப்பதால் அதனால் நாயகனின் வாழ்வைத் தொற்றிக்கொள்ளும் பரபரப்பு  பார்வையாளர்களுக்குக் கச்சிதமாகக் கடத்தப்படுகிறது. வங்கிக்கொள்ளை, கொலை என்று இந்த சிக்கல் வீரியமடைந்து நம்மை சீட்டு நுனிக்குக் கொண்டு வருகிறது. வங்கிக் கொள்ளையர்களின் தலைவன் 60களைத் தொடும் மனிதராக இருப்பதும் அவர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்வதற்கு  அவரது சூழ்நிலைதான் காரணமாக இருக்கக்கூடும் என்ற எண்ணமும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை எதிர்பார்க்க வைக்கின்றன. 

இரண்டாம் பாதியில் த்ரில்லருக்குத் தேவையான சுவாரஸ்யமும் பரபரப்பு ஒரு கட்டத்துக்கு மேல் நீடிக்கவில்லை. முதுமை எய்திவிட்ட ஆண்களின் நிலை அவர்களை குடும்பமும் சமூகமும் நடத்தும் விதம் ஆகியவை பற்றிய எமோஷனல் காட்சிகள் அதிகரிக்கின்றன. இந்தச் சரடும் ஒரு காவலரின் துப்பாக்கி தொலைந்ததால் ஏற்படும் விளைவுகள் என்ற மையச் சரடும் சரியாகப் பொருத்தப்படவில்லை. மூர்த்தி அவ்வளவு பெரிய குற்றங்களைச் செய்வதற்காக சொல்லப்படும் காரணங்கள் போதுமான அளவு வலுவாக இல்லை. 

முன் பாதியில்  முடிச்சுகள் போடப்படும்போது ஆவல் கூடுகிறது. ஆனால் பின் பாதியில் அவை அவிழும்போது கிடைக்க வேண்டிய திருப்தி பெருமளவில் குறைகிறது. கொலையாளியின் முன்கதையை வசனங்களால் நிரம்பிய நீண்ட காட்சியின் மூலம் சொல்லியிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. ஆனாலும் இந்தக் காட்சியில் சில வசனங்கள் பலத்த கைதட்டல்களை எழுப்புகின்றன. சாதாரண நிலையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள் மீது இயக்குனருக்கு இருக்கும் அக்கறை வெளிப்படுகிறது.

இந்தப் புள்ளியிலிருந்து நடப்பவை அனைத்தும் ஏறுக்கு மாறாக நிகழ்வதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அடுத்தடுத்து நிகழும் கொலைகளில் நம்பகத்தன்மையும் இல்லை அவை எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. இறுதிக் காட்சியிலும் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்பது அலுப்பை அதிகரிக்கவே செய்கிறது.  

மூர்த்திக்கு துப்பாக்கி வாங்குவதற்கான பணம் எப்படிக் கிடைத்தது, கொள்ளையர்களில் ஒருவருக்கு ஏன் திடீரென்று மொத்த பணத்தையும் எடுத்துச் செல்வதற்கான ஆவேசம் வருகிறது, கொள்ளையனின் பெயர் மூர்த்தி என்று தெரிந்திருந்தும், நாயகனுக்கு ஏன் தன்னை சந்திக்கும் மூர்த்தி மீது சந்தேகம் எழவில்லை என்பதுபோன்ற சில லாஜிக் ரீதியான கேள்விகளுக்கும் விடையில்லை. 

எம்.எஸ்.பாஸ்கரின் அபாரமான நடிப்புத் திறனை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட படங்களின் பட்டியலில் இடம்பெறுகிறது ‘8 தோட்டாக்கள்’. இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட இவருக்குத்தான் பிரதான பாத்திரம். ஒரு சாதாரண மனிதனின் மனசாட்சி உறுத்தல், கையறுநிலையில் இருக்கும் முதியவரின் ஆற்றாமை, ஏமாற்றப்பட்டு புற உலகின் மீது கோபம் கொண்டவனின் குற்றச் செயல்கள் என்ற பன்முகத்தன்மை வாய்ந்த பாத்திரத்தை கச்சிதமாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார் பாஸ்கர். 

சத்யாவாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் வெற்றி, பாத்திரத்துக்குத் தேவையான முகபாவங்கள், வசன உச்சரிப்பு, உடல்மொழி ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார். உணர்வற்றதுபோல் தோன்றும் அவரது முகம் உண்மையில் பாத்திரத்தின் எதிலும் பிடிப்பில்லாத மனநிலைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.  நாயகி அபர்ணா பாலமுரளி பாத்திரத்துக்குப் பொருந்துவதோடு நடிப்பிலும் குறை வைக்கவில்லை. 

கொள்ளையர்களில் ஒருவனான ஜெய்யாக நடித்திருக்கும் மணிகண்டன் சிறப்பாக நடித்திருக்கிறார். லோக்கல் தாதாவாக பாஸ்கராக நடித்திருக்கும் சார்லஸ் வினோத் உடைய பாத்தி அமைப்பும் அவரது நடிப்பும் ஆங்காங்கே மனம் விட்டு சிரிக்க உதவுகின்றன.  நாசர், மைம் கோபி, ஆர்.எஸ்.சிவாஜி, டி.சிவா ஆகியோர் தங்களது பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. முதல் பாதியில் வரும் பாடல் திரைக்கதை ஓட்டத்துடன் பொருந்துகையில் இரண்டாம் பாதியில் வரும் பாடல் பெரும் வேகத்தடையாக அமைகிறது. பின்னணி இசையில் குறை சொல்ல ஒன்றுமில்லை. தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவு, நாகூரானின் படத்தொகுப்பு, சதீஷ் குமாரின் கலை இயக்கம் ஆகியவை இணைந்து படம் தரும் ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்த உதவுகின்றன.

மிகச் சிறப்பாக தொடங்கி ஓருகட்டம் வரை திரையுடன் ஒன்றவைத்துவிட்டு அதற்குப் பின் ஏற்படும் தடுமாற்றங்களால் , முழு திருப்தி தரத் தவறுகிறது ‘8 தோட்டாக்கள்’. இருந்தாலும் எடுத்துக்கொண்ட களம். நேர்த்தியான பாத்திரப்படைப்புகள், அழுத்தமான வசனங்கள், சிறந்த நடிப்பு என பல நிறைகளையும் உள்ளடக்கிய படமாக இருப்பதால் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குனர்களின் பட்டியலில் இணைகிறார் ஸ்ரீகணேஷ்.


Rating : 2.5 / 5.0