ஜாக்பாட்.. சதுரங்க வேட்டை பட கதைகளை கலந்து, ரூ.2 கோடிக்கு அட்சய பாத்திரம் விற்ற மோசடி கும்பல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வேலூரிலிருந்து புதிய மாவட்டமாகப் பிரித்து உருவாக்கப்பட்ட திருப்பத்தூரைச் சேர்ந்தவர் நவீன். திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கே.ஜி.ரமேஷின் நெருங்கிய உறவினரான இவர், திருப்பத்தூரில் `சுமி ஸ்டூடியோ கலர் லேப்’ என்ற ஸ்டூடியோவையும் லட்சக்கணக்கில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலையும் செய்துவருகிறார்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம், 9 பேர் கொண்ட கும்பல் திருப்பத்தூருக்கு வந்து நவீனைச் சந்தித்துள்ளது. ``எங்களிடம் அட்சயப் பாத்திரம் உள்ளது. அதைப் பூஜை அறையில் வைத்துப் பூஜிக்க வேண்டும். குறிப்பிட்ட சில நாள்கள் கழித்து அட்சயப் பாத்திரத்தைத் திறந்துபார்த்தால் தங்கப் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும். அதிலிருந்து வரும் சிக்னலை வைத்து தங்கப் புதையல் உள்ள இடத்தைக் கண்டுபிடிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் கிலோ கணக்கில் தங்கமாக எடுக்கலாம். அட்சயப் பாத்திரம் குறித்து உங்கள் மனைவியிடம்கூட வாய்த் திறக்கக் கூடாது. வெளியில் யாரிடமாவது சொன்னால் அதனுடைய சக்தி போய்விடும்’’ என்று ஆசையைத் தூண்டிவிட்டனர்.
புதையலுக்கு ஆசைப்பட்ட நவீன், `எப்படியாவது அட்சயப் பாத்திரத்தை வாங்கிவிட வேண்டும்’ என்று யோசித்தார். அந்தக் கும்பல், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிப்பள்ளி பகுதியில் உள்ள ஒருவரது வீட்டுக்கு நவீனை அழைத்துச் சென்றனர். வர்ணக் காகிதங்கள் ஒட்டப்பட்டுச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட அட்டைப் பெட்டியைக் காண்பித்து, `இதுதான் அட்சயப் பாத்திரம். தொட்டுக் கும்பிட்டுக் கொள்’ என்று ‘பில்டப்’ கொடுத்தனர்.
அட்சயப் பாத்திரத்தைத் திறந்தும் காண்பித்தனர். அதிலிருந்து சிக்னல் காட்டுவதைப் போன்று லைட்டுகள் எறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உடனே நவீனை அருகில் உள்ள ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று பள்ளம் தோண்டினர். அங்கு, நவீனுக்குத் தெரியாமல் ஏற்கெனவே புதைத்துவைத்த சில தங்க நகைகளை எடுத்துக் காட்டி நம்ப வைத்தனர்.பிரமித்துப் போன நவீன், `இந்த அட்சயப் பாத்திரம் தனக்கு வேண்டும்’ என்று அடம்பிடித்துள்ளார். ``அவ்வளவு எளிதில் கொடுத்துவிட மாட்டோம். இதற்கென தனி பூஜை அறை வைத்துக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா...?’’ என்றெல்லாம் அந்தக் கும்பல் பில்டப்புக்கு மேல் பில்டப் கொடுத்தது. பின்னர், ஒரு வழியாக ரூ.2 கோடியே 10 லட்சத்துக்கு அட்சய பாத்திரத்தை வாங்கிவிட்டார் நவீன்.
தன் வீட்டுக்கு ரகசியமாகக் கொண்டுவந்து வைத்து பூஜை செய்து சில நாள்கள் கழித்து திறந்துபார்த்தார். நகைகள் இருக்கும் புதையலை அந்தப் பெட்டி காட்டவில்லை. பிறகு அதைச் சோதனை செய்தபோது, உள்ளே வெறும் மரத்துண்டுகளும் சில பேட்டரி லைட்டுகளும் கிடந்துள்ளன.
‘அது, அட்சயப் பாத்திரம் இல்லை’ என்பதைத் தாமதமாக உணர்ந்த நவீன் அழுது புலம்பியுள்ளார். பின்னர், தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு சித்தூரில் உள்ள அந்த வீட்டுக்குச் சென்றார் நவீன். அங்கு யாருமில்லை. இதையடுத்து, அந்த ஏரியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், திருப்பதி அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு கார்களில் வந்த 8 பேர் போலீஸாரைக் கண்டதும் வாகனத்தைத் திருப்பி தப்பிச் செல்ல முயன்றனர்.
சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை துரத்திப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள்தான் திருப்பத்தூர் நவீனை ஏமாற்றி அட்சயப் பாத்திரத்தை விற்றவர்கள் எனத் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியைச் சேர்ந்த மகாதேவா (42) மற்றும் சிவக்குமார் (19), சிக்பல்லாபூர் பகுதியைச் சேர்ந்த கங்காதர் (30), பெங்களூருவைச் சேர்ந்த தனசேகர் (35), சித்தூரைச் சேர்ந்த சீனப்பா (35), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரா (40), வேப்பனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (28), காஞ்சிபுரம் ராஜகுளம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (35) என்று தெரியவந்தது.
8 பேரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடமிருந்து 1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கைப்பற்றினர். மேலும், இரண்டு கார்கள், பைக்கை பறிமுதல் செய்தனர். ‘‘டன் கணக்கில் தங்கப் புதையலை அள்ளித் தரும் அட்சயப் பாத்திரத்தை வைத்திருக்கும் கும்பல், அதைவைத்து உலகப் பணக்காரர் ஆகியிருக்கலாமே.. ஆனால், ஏன் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பேரம் பேசி விற்கிறார்கள். இதையெல்லாம் உணர்ந்தாலே பணத்தைப் பறிகொடுக்காமல் தப்பிக்கலாம். மண்ணுளிப் பாம்பு, இரிடியம் வரிசையில் அட்சயப் பாத்திரம் மோசடியும் சேர்ந்திருக்கிறது. இதுபோன்ற மோசடியில் சிக்கி பணத்தை இழக்காமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்’’ என்கிறார்கள் காவல்துறையினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments