தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: மீண்டும் சென்னையில் 500க்கும் மேல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இதன்படி தமிழ்நாட்டில் இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 8002ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பில் தமிழகம் புதிய உச்சம் பெற்றுள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 798 பேர்களில் சென்னையில் மட்டும் 538 பேர்கள் என்றும் இதனை அடுத்து சென்னையில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4371ஆக உயர்ந்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 90 பேர் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 11584 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 243,952 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 92 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் 2051 பேர் குணமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 6 பேர் பலியாகி இருப்பதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்த பலி 53ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.