ஒரே நாளில் பி.எஸ்.என்.எல்லில் இருந்து வெளியேறும் 80,000 ஊழியர்கள்..! இந்தியாவிலேயே முதல்முறை.
Send us your feedback to audioarticles@vaarta.com
நஷ்டத்தில் இயங்கிவரும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து இன்று ஒரே நாளில் மட்டும் 78,559 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பொதுத்துறை நிறுவனத்திலிருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவது நாட்டிலேயே முதன்முறை ஆகும். தனியார் நிறுவனங்களின் போட்டி காரணமாக பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நலிவடைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 1.63 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். நஷ்டம் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல், பி.எஸ்.என்.எல் நிர்வாகம் தடுமாறியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கான சிறப்பு விருப்ப ஓய்வுத் திட்டத்தை பல்வேறு சலுகைகளுடன் அறிவித்தது.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 92,000 பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர். அதில், 78,559 ஊழியர்கள் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர். இனிமேல், 80,000 ஊழியர்களுடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் செயல்படும். நிறுவனத்தின் பல்வேறு வேலைகளை அவுட்சோர்ஸிங் வழியாக மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் பிப்ரவரி மாதத்துக்குள் வழங்கப்படும். ஓய்வூதிய பணப் பலன்கள் முதல் பாதி மார்ச் மாத இறுதிக்குள்ளும் அடுத்த பாதி ஜூன் மாத இறுதிக்குள்ளும் இரு பகுதிகளாக வழங்கப்படவுள்ளது.
எம்.டி.என்.எல் நிறுவனத்திலிருந்தும் 14,378 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் ரூ.40.000 கோடி கடன் வைத்துள்ளன. விருப்ப ஓய்வையடுத்து 4,340 ஊழியர்கள் பற்றாக்குறையுடன் பி.எஸ்.என்.எல் நிறுவனம் செயல்படும்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் போலவே, நஷ்டத்தில் இயங்கும் மற்றொரு பொதுத்துறை நிறுவனமாக ஏர் இந்தியா ஊழியர்களுக்கும் சிறப்பு சலுகைகளுடன் விருப்ப ஓய்வு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் 17,984 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், 9,617 பேர் நிரந்தர ஊழியர்கள். தற்போது ஏர் இந்தியாவின் 100 சதவிகிதப் பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. `ஹிந்துஜா' குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முனைப்பு காட்டுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments